சிறப்பு செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சேலம்,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்திருக்கின்றன. குறிப்பாக கோவை மாநகராட்சி, சென்னை மாநகராட்சியில் ரவுடிகளும், குண்டர்களும் அதிக அளவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கழகத்தின் நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

அதேபோல் கோவை மாநகராட்சியில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து, கோவை மாநகராட்சியில் தேர்தல் பிரச்சாரம் முடிவுற்ற பிறகு ரவுடிகளும், குண்டர்களும் பல இடங்களில் தங்கியிருந்து கொண்டு 19-ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வன்முறையை உருவாக்கி சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்க செய்து மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களிக்க முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக திட்டமிட்டிருந்தார்கள்.

ஆகவே மாவட்ட ஆட்சித் தலைவர் முறைகேடாக தேர்தல் விதிமுறைக்கு புறம்பாக ரவுடிகளும், குண்டர்களும் கோவையில் தங்கியிருந்தவர்களையெல்லாம் அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்கள். அதற்கு முன்பும் கோரிக்கை மனு கொடுத்தார்கள்.

அதேபோல் கோவை மாநகராட்சி காவல்துறை ஆணையரிடமும் மனு கொடுத்தார்கள். ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவரும், கோவையில் இருக்கின்ற காவல்துறை ஆணையாளரும் சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் நீதிமன்றத்தின் மூலமாக அங்கே ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இப்படி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலே கோவை மாநகராட்சி, சென்னை மாநகராட்சி அதிக இடங்களில் வன்முறை நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக சென்னை மாநகராட்சியில் இருக்கின்ற பல வார்டுகளில் உள்ள பூத்களில் கள்ள ஓட்டுகளை தி.மு.க.வை சேர்ந்தவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் தோல்வியுற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இப்படி கள்ள ஓட்டுக்களை வாக்குச்சாவடிகளில் அத்துமீறி உள்ளே புகுந்து பதிவு செய்து உள்ளார்கள். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவில்லை, காவல்துறையினர் முன்பாகவே தி.மு.கவை சேர்ந்தவர்கள் அவர்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்கள்.

அவர்களுடைய கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று பணம் பட்டுவாடா செய்தார்கள். அவையெல்லாம் காவல்துறை அதிகாரிகளின் கண் முன்பே நடந்தது. கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் எவ்வளவோ சுட்டிக்காட்டியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

சென்னை மாநகராட்சியில், திருவல்லிக்கேணி தொகுதி 114-வது வார்டில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுகிறார்கள். இந்த வீடியோ காட்சிகளை பலபேர் செல்போனில் பதிவு செய்து உள்ளனர். அந்த வீடியோவில் ஏன் எங்களை கள்ள ஓட்டு போட விட மாட்டீர்கள் என்று பகிரங்கமாக அதிகாரிகளை மிரட்டுகின்றனர்.

இதுபோன்ற வீடியோ காட்சிகளை ஆதாரமாக நாங்கள் தெரிவிக்கிறோம், அதிகாரிகளையும் தி.மு.க.வினர் மிரட்டுகின்றனர். இங்கே இருக்க மாட்டீர்கள், டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு போய்விடுவீர்கள் என்று மிரட்டுகின்றனர். எந்த அளவுக்கு அதிகாரிகளை மிரட்டி கள்ள ஓட்டுகளை பதிவு செய்தார்கள் என்பதை தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு இதை தெரிவிக்கிறோம்.

திருவல்லிக்கேணி தொகுதி 115வது வார்டிலும் முறைகேடாக வாக்களித்துள்ளனர். கள்ள ஓட்டுகளை பதிவு செய்து உள்ளனர். 115-வது வார்டு வேட்பாளரின் கணவர் காவல்துறை அதிகாரிகளை மிரட்டுகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும். ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இன்றைக்கு அச்சமில்லாமல் மக்கள் வாக்களிக்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.