தற்போதைய செய்திகள்

விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் உத்தரவின் பேரின் தலா ரூ.10 லட்சம் – அமைச்சர்கள்ஆகியோர் வழங்கினர்

திருநெல்வேலி

விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் உத்தரவின்பேரில் தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் செக்காரக்குடி கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் குத்தப்பாஞ்சான் கிராமம், மஐரா பரம்பு நகர் பகுதியை சார்ந்த தினேஷ் ஆகிய 4 நபர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் உத்தரவுப்படி தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி ஆகியோர் விஷ வாயு தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சத்துக்கான காசோலையினை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகையாபாண்டியன் (அம்பாசமுத்திரம்), இன்பதுரை(ராதாபுரம்), சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம் செக்காரக்குடி கிராமத்தில் தனியார் ஒருவருடைய வீட்டில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி வீரவநல்லூரை சேர்ந்த பாண்டி, இசக்கிராஜ், பாலகிருஷ்ணன் மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் குத்தப்பாஞ்சான் கிராமம், மஐரா பரம்பு நகர் பகுதியை சார்ந்த தினேஷ், ஆகிய 4 நபர்கள் 2.7.2020 அன்று விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள்.

இந்த செய்தியினை அறிந்த உடன் முதலமைச்சர், உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொண்டார். மேலும் இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கிட உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 நபர்களின் வாரிசுதாரர் மற்றும் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கி அரசு சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதுபோன்ற பணியில் நேரடியாக ஈடுபடக்கூடாது எனவும், தொழில்நுட்ப முறை கழிவு நீர் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் தச்சை கணேசராஜா, தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமாசங்கர், ஆவின் தலைவர் சுதா பரமசிவம், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பரணி சங்கரலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஓட்டப்பிடாரம்) சுப்புலட்சுமி, வெங்கடாசலம், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகம், ஜெரால்டு, மாதவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.