தற்போதைய செய்திகள்

நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ 12,258.94 கோடியை விரைவாக வழங்கவேண்டும் – அமைச்சர் டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை

நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையான ரூ 12,258.94 கோடியை விரைவாக வழங்கவேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

41-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றக் கூட்டம் நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். கூடுதல் தலைமைச் செயலாளர், நிதி மற்றும் முதன்மைச் செயலாளர் , வணிகவரி ஆணையரும் கலந்து கொண்டார்.

இந்த கூட்டம் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இழப்பீடு குறித்து விவாதிக்கப்படுவதற்கென மட்டுமே கூட்டப்பட்டிருந்தது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டி நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.553.01 கோடி, 2019-2020 ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.246.56 கோடி மற்றும்

2020-2021 ஆம் ஆண்டிற்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,459.37 கோடி, ஆக மொத்தம் ரூ.12,258.94 கோடியினை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டுமென மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூட்டத்தில் வலியுறுத்தினார். மேலும், 2017-2018-ம் ஆண்டிற்கு தமிழகத்திற்கு வரப் பெற வேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4073 கோடியினையும் விரைந்து வழங்கிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

சரக்குகள் மற்றும் சேவை வரி முறையினை அமல்படுத்திடும் பொருட்டு மாநிலங்களுக்கு ஏற்படக்கூடிய வருவாய் இழப்பினை மத்திய அரசு ஈடுசெய்ய முன்வந்ததைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு சரக்குகள் மற்றும் சேவைகள் (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டமானது மத்திய அரசால் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, 2015-2016 நிதியாண்டினை அடிப்படை ஆண்டாக கொண்டு 14 சதவீத வளர்ச்சி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசானது இழப்பீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பொருட்டு மத்திய அரசு தற்போது மேல் வரி விதித்து வருகிறது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையினை தொடர்ந்து வழங்கும் பொருட்டு மேல் வரி தொகுப்பு நிதியினை பெருக்குவதற்கான பிற வருவாய் ஆதாரங்களை கண்டறிய வேண்டிய முழு பொறுப்பு மத்திய அரசுக்கு தான் உள்ளது. தேவையெனில், ஜிஎஸ்டி இழப்பீடு மேல்வரி விதிப்பதற்கான காலக் கெடுவினை 5 வருடத்திற்கு மேலான காலத்திற்கு நீட்டிப்பு செய்வதற்கு சட்டத்திருத்தம் மேற்கொண்டு வழிவகை செய்ய மத்திய அரசு முன் வர வேண்டும்.

மேலும், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு ஜிஎஸ்டி மேல்வரி தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு கடனாகவோ முன்பணமாகவோ வழங்கிட வேண்டும். இந்த கடனானது எதிர்வரவிருக்கும் மேல்வரி வரவினத்தில் ஈடு செய்து கொள்ளலாம். மேற்படியான பரிந்துரையினை ஜிஎஸ்டி மன்றமானது மத்திய அரசுக்கு அளித்திட வேண்டும் என மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

தற்போது கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாநிலங்களின் நிதிச் சுமை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பொருட்டு பிற செலவினங்களை தமிழகமானது குறைத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை விட்டுக் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதி ஆதாரத்தினை மேலும் விட்டுக் கொடுக்கும் பட்சத்தில் அது ஏழை எளியோர்களுக்கான நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூட்டத்தில் வலியுறுத்தி, மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி இழப்பீட்டினை தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.