தற்போதைய செய்திகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் மருத்துவர்களின் திறமையால் நோயாளிகள் குணமடைந்து வருகிறார்கள்- முதலமைச்சர் பெருமித பேச்சு

சென்னை,

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் மருத்துவர்களின் திறமையால் நோயாளிகள் குணமடைந்துவருகிறார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது.

உலகளவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசால் முழுமூச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, தனிக் கவனம் செலுத்தப்பட்டு, இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து அவர்களை குணமடையச் செய்யும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. போதிய மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நோய் தொற்றுக்கு மருத்துவர்கள் சரியான முறையில் சிகிச்சையளிக்கும் காரணத்தாலும், இந்தியாவில், அதிக பரிசோதனைகள் செய்கின்ற முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாலும், இந்நோய்த் தொற்று பரவல் குறைக்கப்பட்டு நாட்டிலேயே, தமிழ்நாட்டில்தான் குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு நாள்தோறும் சுமார் 350 காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன. கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8,075 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுள்ளன. இம்முகாம்களின் மூலம் 3,25,576 நபர்கள் பங்கு பெற்று, 2,380 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு காய்ச்சல் முகாம்கள் பேருதவியாக இருக்கின்றது.

அதை அரசு தமிழகத்தில் உரிய முறையில் செயல்படுத்தி வருகின்றது. 31 கோவிட் கேர் மையங்களில் 3,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 37 இடங்கள் கண்டறியப்பட்டு 5,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை களாக உருவாக்கப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில், அதிகமான நோய் தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு 39 நடமாடும் மருத்துவமனைகள் நேரில் சென்று பரிசோதித்து, நோய் தொற்று உள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது ஒரு புதிய நோய் தொற்றாக இருப்பதால் இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும், மருத்துவர்களின் திறமையால் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சரியான முறையில் சிகிச்சையளித்து குணமடைந்து வருகிறார்கள். எனவே மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த, உளமார்ந்த பாராட்டுகளை அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்நோய்ப் பரவலைத் தடுக்க, கடலூர் மாவட்டத்திற்கு ரூபாய் 6.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.