தற்போதைய செய்திகள்

ரூ.85.26 லட்சத்தில் புதிய திட்டப்பணிகள் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ரூ.85.26 லட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், நேற்று காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொத்தியபாளையம் ஊராட்சி கல்லாங்காட்டு புதூரில் ரூ.75.82 லட்சம் மதிப்பீட்டில் சுய உதவிக்குழு கூட்ட கட்டிடம் கட்டும் பணி, கவுண்ம் பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.9.44 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி என காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.85.26 லட்சம் மதிப்பீட்டிலான புதிய வளர்ச்சித் திட்டபணிகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்து வளர்ச்சித்திட்டபபணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக, கவுண்டம் பாளையத்தில், தன்னார்வலர்கள் (துளிகள் அமைப்பு) சார்பில், நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் மரக்கன்றுகளையும் அமைச்சர் நட்டு வைத்தார்.

அதைத்தொடர்ந்து, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 75 மகளிருக்கு தலா ரூ.25,000 மதிப்பில் ரூ.18,75,000 மதிப்பிலான காசோலை, 26 மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான ஆணை,

முதலமைச்சர் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 5 நபர்களுக்கு தலா ரூ.2,10,000 மதிப்பில் ரூ.10,50,000 மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை மற்றும் மகளிர்த் திட்டத்தின் கீழ் நத்தக்காடையூர் மற்றும் வீரணாம்பாளையம் ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு தலா ரூ.10,44,972 மதிப்பிலான (85 சதவீதம் மானிய உதவியுடன்) வேளாண்கருவிகளையும் என 107 நபர்களுக்கு ரூ.50.25 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி மறைந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பொதுமக்கள் நல்ல முறையில் பெற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

தொடாந்து, நத்தக்காடையூர் ஊராட்சி உலகுடையார்பாளையம் பகுதியில் ரூ.14.52 லட்சம் மதிப்பீட்டில் முத்தையன் கோவில் அருகிலுள்ள ஓடையில் கட்டப்பட்டு வரும் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பனை அமைக்கும் பணியையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.