சிறப்பு செய்திகள் மற்றவை

சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் அச்சப்பட தேவையில்லை : முதல்வர் திட்டவட்டம்

சென்னை

சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் ஐயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது,

இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக திகழும் மாநிலம் தமிழ்நாடு. மதச் சார்பின்மையை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது நமது மாநிலம்.

இங்கு வாழும் அனைத்து சமயத்தினரும் சகோதரர்களாக பழகி வருகிறார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும்,மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில், அம்மாவின் அரசும், அனைத்து சமயத்தினரையும் பாதுகாக்கும் ஒரு மத நல்லிணக்க அரசாகவும், சிறுபான்மையின மக்களுக்கு அரணாகவும் செயல்பட்டு வருகிறது. இனியும், சிறுபான்மையின மக்களை தொடர்ந்து பாதுகாக்கும் அரணாக விளங்கும் என்பதையும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். இதையே நான் சட்டமன்றத்திலும் தெரிவித்துள்ளேன்.

ஆனால் சமீப காலங்களில் இதனை கண்டு பொறுக்காதவர்கள், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் உண்மைக்குப் புறம்பாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சிறுபான்மையின மக்கள் எள்ளளவும் ஐயப்படவோ, அச்சப்படவோ தேவையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆடு – நரி கதை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு””என்றார் மகாகவி பாரதியார். சில கட்சியினரின் பொய் பிரச்சாரத்திற்கு செவி சாய்க்காமல் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இதனை கூறும்போது, எனக்கு கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.ஒரு காட்டிற்கு அருகில் இருந்த ஊரில், இரண்டு ஆடுகள் தோழமையுடன் அமைதியாக வாழ்ந்து வந்தன.

இந்த ஆடுகளின் ரத்தத்தை ருசிக்க விரும்பிய ஒரு நரி, சில நாட்கள் அந்த ஆடுகளை நோட்டமிட்டு வந்தது. அந்த ஆடுகள் எப்போது பிரிந்து தனியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நரி, ஒரு நாள் தனியாக இருந்த அதில் ஒரு ஆட்டிடம் சென்று,நீயும், உன் நண்பனும் உணவு உண்ண நீ ஒருவனே கஷ்டப்படுகிறாய்; மற்றொரு ஆடு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. உனக்கு கஷ்டமாக இல்லையா ?”” என்று கேட்டு, அந்த ஆட்டின் மனதில் விஷமத்தை உண்டாக்கியது.

இதே போன்று மற்றொரு ஆட்டிடமும் சென்று இதே எண்ணத்தைக் கூறியது. ஒரு கட்டத்தில் அந்த ஆடுகளின் மனதில் தான் தான் கஷ்டப்படுகிறோம் என்ற எண்ணம் தோன்றவே,இரண்டு ஆடுகளும் ஒரு நாள் சண்டையிட்டுக் கொண்டன.பின்னர் அவை மிகவும் சோர்வடைந்து ஓரத்தில் ஒதுங்கி உட்கார்ந்து கொண்டன. இதை கவனிக்காமல், இரண்டு ஆடுகளும் அங்கிருந்து சென்று விட்டன என்று எண்ணிய அந்த நரி,அங்கு சிந்தி இருந்த ரத்தத்தை ருசித்துக் கொண்டிருந்தது.இதை இரண்டு ஆடுகளும் பார்த்து விட்டன.

பின்னர் அவ்விரண்டு ஆடுகளும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டபோது தான், நரியின் விஷமப் பிரச்சாரம்,
அந்த ஆடுகளுக்குத் தெரிந்தது. இதனால் விழித்துக் கொண்ட அந்த ஆடுகள் ஒரு திட்டத்துடன் மீண்டும் சண்டையிடுவது போல்
அங்கு வந்து மோதிக் கொள்ள தயார் ஆயின. அந்த நேரத்தில் ஏதோ சமாதானம் செய்ய வந்தது போல் அங்கு வந்த நரியை, இரண்டு ஆடுகளும் சேர்ந்து முட்டித் தள்ளி விரட்டியடித்து அந்த நரிக்கு பாடம் புகட்டின.

அது போல் மக்களிடையே பிளவு ஏற்படுத்திட யார் முயன்றாலும், அம்மாவின் அரசின் முயற்சிகளாலும், உங்களது ஒத்துழைப்பினாலும், அது முறியடிக்கப்பட்டு, அமைதி, வளம், வளர்ச்சி என்ற அம்மாவின் தாரக மந்திரத்தைப் பின்பற்றி, தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதை நான் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.