முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி – கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேட்டி

கோவை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி அறிவுறுத்தலின் பேரில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. தலைமையில் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம் எம்.எல்.ஏ. முன்னிலையில் ஆயிரத்திற்கும் மேலான நிர்வாகிகளும், கழக தொண்டர்களும் கோவை “இதயதெய்வம் மாளிகையில்” இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி சாலையில் உள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும் தலைமை அலுவலகமான “இதயதெய்வம் மாளிகையில்” கழக கொடி ஏற்றப்பட்டு, அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி, மாலையிட்டு மரியாதை செய்து கழக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
இதன் பின்னர் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை பறி கொடுத்தாலும் கோவை என்றுமே கழகத்தின் கோட்டைதான். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடந்திருந்தால் மகத்தான வெற்றியை சந்தித்திருப்போம். தி.மு.க.வினர் தற்போது முறைகேடுகளால் வெற்றி பெற்றுள்ளனர். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழாவில் ஒரு உறுதிமொழியை ஏற்போம். இது கழகத்தின் தோல்வியல்ல. முறைகேடுகளின் வெற்றி.
வாக்கு எண்ணிக்கையிலும் பல்வேறு முறைகேடுகளை தி.மு.க.வினர் நிகழ்த்தியுள்ளார்கள். வாக்கு இயந்திரத்தில் சீல் இல்லாமல் இருந்ததை அனைவரும் பார்த்தோம்.
இது மக்கள் வழங்கிய தீர்ப்பு அல்ல. செயற்கையாக பெற்ற வெற்றி.
பணத்திற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. வாக்கு இயந்திரத்தில் நடந்த முறைகேடுகளால் தி.மு.கவினர் செயற்கையாக வெற்றி பெற்றுள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.