சிறப்பு செய்திகள்

சட்டத்தை மதிக்காத கட்சி தி.மு.க. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை புழல் சிறையில் நேற்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.பென்ஜமின் மற்றும் கழகத்தினர் உடன் சென்றனர்.

இதன் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 19-ந்தேதி நகர்ப்புற தேர்தல் நடைபெற்றது. சென்னையிலும் மாமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவரது பகுதியில் இருக்கின்றபோது தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கள்ள ஓட்டு போட முயற்சிப்பதாக தகவல் கிடைத்தவுடன் உடனடியாக அந்த நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

ஜனநாயக கடமையை செய்தவருக்கு இன்றைக்கு சிறைத் தண்டனை அளித்துள்ளார்கள். தை ஒரு சர்வாதிகார அரசாக மக்கள் பார்க்கின்றார்கள். முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது வழக்குகள் பதிவு செய்து அதன் அடிப்படையிலே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தசெயல் வன்மையாக கண்டிக்கதக்கது.

எதிர்க்கட்சியை நசுக்குகின்ற முயற்சியை முதல்வர் ஸ்டாலின் செய்து கொண்டிருக்கின்றார். இது சரியல்ல. நானும்
முதலமைச்சராக இருந்தவன். நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஒரு வண்டிக்கு சக்கரம்போல இருக்க வேண்டும்.

ஆளும் கட்சி செய்கின்ற தவறை எதிர்க்கட்சி சுட்டிக் காட்டுவது ஜனநாயக மரபு. நடைபெற்று முடிந்த நகர்ப்புற தேர்தலில் ஆளும் கட்சியினர் கள்ள ஓட்டு போட்டு, 9 மாத கால ஆட்சியில் கொள்ளை அடித்த பணத்தை வைத்து, இன்றைக்கு ஒவ்வொரு வாக்கிற்கும் ரூ.3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அளித்து, பரிசுப் பொருட்களை அளித்து வெற்றி பெற்றுள்ளார்கள். ஜனநாயக முறைப்படி நகர்ப்புற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறவில்லை. ஜனநாயக படுகொலை நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தலை பொறுத்தவரையில் தி.மு.க. அரசுக்கு தேர்தல் ஆணையம் கைப்பாவையாக இருந்து செயல்பட்டது. இதற்கு முழுக்க, முழுக்க காவல்துறையினர் ஒத்துழைப்பு அளித்திருக்கிறார்கள். தி.மு.க.வுக்கு தமிழக காவல்துறை ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது.

வேண்டுமென்றே திட்டமிட்டு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கள்ள ஓட்டு போட முயன்ற அந்த நபர் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி அவர் (நரேஷ்) குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சில வழக்குகளில் அவர் தண்டனை பெற்று இன்றைக்கு ஜாமீனில் இருப்பதாக எனக்கு கிடைத்த தகவல். இப்படி உள்ள ஒருவருக்காக தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரே நீதிமன்றத்திற்கு வந்து வாதாடுகிறார். எனவே குண்டர்களையும், ரவுடிகளையும்
வைத்துதான் இவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

மாநகர காவல் ஆணையாளர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே ரவுடிகள், குண்டர்களை நாங்கள் கைது
செய்துள்ளோம் என்று சொன்னார். அப்படி கள்ள ஓட்டு போட முயன்றவர் கைது செய்யப்பட்டிருந்தால் இந்த பிரச்சினையே
வந்திருக்காது.

கள்ள ஓட்டு போட முயன்றிருக்க மாட்டார். முன்னாள் அமைச்சருக்கு இந்த நிகழ்வு நடந்திருக்காது. ரவுடிகளையும், குண்டர்களையும் முழுமையாக இவர்கள் கைது செய்யவில்லை. இதனால்தான் இதுபோன்ற பிரச்சினை நிகழ்ந்துள்ளது. தி.மு.க. அரசு திட்டமிட்டு, தேர்தல் ஆணையத்தையும், காவல்துறையையும் பயன்படுத்தி, நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

கேள்வி:- சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர் இதுதொடர்பாக பேட்டி
அளித்திருந்தாரே?

பதில்:- ஆமாம். கள்ள ஓட்டு போட முயன்றதாக பேட்டி அளித்திருந்தார். இவை அனைத்தையும் நீதிமன்றத்தில்
தெரிவித்தோம் .ஆனால் நீதிமன்றம் முழுமையாக எங்கள் தரப்பு வாதங்களை கேட்கவில்லை. அங்கு எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. இருந்தாலும் வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த அரசு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. கள்ள ஓட்டு போட முயன்றவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்.

ஒப்படைத்த பிறகு அவர் கல் எடுத்து வீசுகிறார். இதனை தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கலாம். கள்ள ஓட்டு போட முயன்றவரை காவல்துறையில் ஒப்படைத்த பிறகு அவர் மீண்டும் கல் எடுத்து எறிகிறார்.

அப்படிப்பட்ட ஒருவருக்கு திமுக அரசு ஆதரவு அளித்து வருகிறது. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை.இ து வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயக குரல்வளையை நசுக்கும் அரசாக ஸ்டாலின் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

கேள்வி:- முன்னாள் அமைச்சரை கைது செய்துள்ள விவகாரம் அ.தி.மு.க.வினரை சோர்வு அடைய செய்யும் என்று
நினைக்கிறீர்களா?

பதில்:- எந்த காலத்திலும் சோர்வடைய மாட்டோம். கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் இப்படித் தான்
செய்தார். புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பிக்கும்போது எவ்வளவோ இடையூறு செய்தார். இவை அனைத்தையும் தாண்டி தான் புரட்சித்தலைவர் வெற்றி கண்டார்.

அதற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற பொழுதும் இப்படிப்பட்ட நிகழ்வு நடைபெற்றது. எவ்வளவோ பிரச்சினைகளை உருவாக்கி பார்த்தார்கள். எவ்வளவோ அடக்குமுறைகளை செய்தார்கள். இவை அனைத்தையும் முறியடித்து தான் புரட்சித்தலைவி அம்மா தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.

அம்மாவின் மறைவுக்கு பின்னர் நான் முதலமைச்சராக இருந்தபோது எவ்வளவோ முயற்சி செய்தார்கள். கட்சியை உடைக்க பார்த்தார்கள். சட்டமன்ற உறுப்பினரை விலைக்கு வாங்க பார்த்தார்கள். இவற்றை எல்லாம் நிராகரித்தோம். அப்போது என்னுடைய ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஆணை பிறப்பித்தார்.

நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கின்ற பொழுது என்ன நடந்தது என்று தெரியும். சட்டம் இயற்றும் மாமன்றத்தில் நடந்து கொண்ட விதம் இன்னும் கண்ணிலேயே இருக்கின்றது. பேரவை தலைவரை இழுத்து அவர் இருக்கையில் தி.மு.க.வினர் அமர்ந்தார்கள். என்னுடைய மேஜை மீதும், அமைச்சர்கள் மேஜை மீதும் தி.மு.க.வினர் எறி நின்று நடனம் ஆடினார்கள். சட்டத்தை மதிக்காத கட்சி. தி.மு.க.. ஸ்டாலினும் அப்படித் தான்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்:- நாங்கள் இதனை சட்ட ரீதியாக சந்திப்போம் .இது நீதிமன்றத்தின் மூலமாக தீர்க்க வேண்டிய
பிரச்சினை. நீதிமன்றத்தை நாங்கள் நாடியுள்ளோம்.

கேள்வி:- மறைந்த முதல்வர் அம்மா இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது என்று பரவலாக
பேசப்படுகிறதே?

பதில்:- புரட்சித்தலைவி அம்மாவையே சட்டமன்றத்தில் தாக்கினார்களே? சட்டமன்றத்தில் நான் சேவல் சின்னத்தில் நின்று வெற்றிபெற்று அம்மாவுடன் பணியாற்றினேன். அப்போது அம்மா எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தாக்கியவர்கள் தான் இந்த
தி.மு.க.வினர். அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அம்மா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.

பெண் என்றும் பாராமல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாவை கடுமையாக தாக்கினார்கள். முதலமைச்சர் கண் முன்னே, எதிர்க்கட்சி தலைவரை பெண் என்றும் பாராமல் தாக்கிய கட்சிதான் தி.மு.க.. இவர்களிடம் நியாயம். நேர்மை, தர்மத்தை எதிர்பார்க்கவே முடியாது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அராஜகம் தான் அரங்கேறும். அதனை இப்போது அரங்கேற்றி வருகிறார்கள். எதிர்க்கட்சியை பழிவாங்குவது, எதிர்க்கட்சியை ஒடுக்குவது மூலம் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியே தமிழகத்தில்
இருக்கக்கூடாது என்ற நிலையில் இருக்கின்ற கட்சி தி.மு.க.. அது ஒருபோதும் நடக்காது.

தலைவர் காலத்திலும் அப்படித் தான் இருந்தது. அம்மா காலத்திலும் அப்படித் தான் இருந்தது. அம்மா மறைவுக்கு பிறகும் அப்படிதான் இருக்கிறது. இவை அனைத்தையும் முறியடித்துத்தான் இந்த இயக்கத்தை நடத்துகிறோம். இது தொண்டர்களால் ஆளப்படுகின்ற இயக்கம்.

தொண்டர்களை யாராலும் ஒழிக்க முடியாது. நிராகரிக்க முடியாது. என்றைக்கும் உழைப்புதான் நிற்கும். அந்த உழைக்கின்ற தொண்டர்கள் கழகத்தில் இருக்கிறார்கள். தொண்டர்கள் இருக்கின்ற வரை எந்த கொம்பனாலும் கழகத்தை அசைக்கவும் முடியாது. எங்களை ஒடுக்கவும் முடியாது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.