சிறப்பு செய்திகள்

புரட்சித்தலைவி அம்மா சிலைக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மரியாதை

சென்னை

கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா தலைமை கழகத்தில் நேற்று காலை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஒப்புதலோடு தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்த நாளான நேற்று காலை சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவச்சிலைக்கும், கழக நிறுவன தலைவர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கும், கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள சிறப்பு மலரை ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டனர். அதன் பிரதியை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மேடையில் அமைந்துள்ள கழக கொடியை கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்றி வைத்து, அனைத்து கழக நிர்வாகிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் இனிப்பு வழங்கினர்.

அம்மா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பேராசிரியர் முனைவர் சா.கலைப்புனிதன் எழுதிய “புரட்சித்தலைவி அம்மாவின் அகிலம் போற்றும் பெண்கள் நலத்திட்டங்கள்’’ என்ற நூலினை வெளியிட்டனர். பின்னர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன்உசேன் ஏற்பாட்டின்பேரில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த 74 கிலோ எடை கொண்ட கேக்கினை வெட்டி, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் வழங்கினர்.

இதன் பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் கழக அமைப்பு செயலாளரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளருமான ஆதிராஜாராம் மூலம் தலைமை கழக வளாகம் எதிரே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நலத்திட்ட உதவிகளையும், அறுசுவை உணவையும் ஏழை, எளியோருக்கு வழங்கினர். மேலும் தலைமை கழகத்தை ஒட்டியுள்ள எஸ்.வி.ஆர். திருமண மண்டபத்தில், கழக வர்த்தக அணி செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, ஏழை, எளியோருக்கு அறுசுவை உணவு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை கழக வளாகத்தை ஒட்டியுள்ள சாலைகளின் இருமருங்கிலும் கழக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு, மேளதாளம் முழங்க விழாக்கோலம் பூண்டிருந்தது. அதேபோல் விழாவில் பங்கேற்ற கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு சாலையின் இருமருங்கிலும் கழக உடன்பிறப்புகள் கழக கொடியினையும், அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்க கொடியினையும் தங்கள் கைகளில் ஏந்திய வண்ணம் வரவேற்பு அளித்தனர்.

இவ்வாறு தலைமை கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கழக உடன்பிறப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன் படி தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், படங்களுக்கும் மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதேபோல் கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.