அரசு மீன் வளக்கல்லூரி அமைக்க வேண்டும்

சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்
சென்னை,
திருவண்ணாமலை சாத்தனூர் அணை அல்லது போளூர் தொகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் அரசு மீன் வளக் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தி பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:-
மழை நீரையும் மனமுவந்து ஏற்று, விதவிதமாய் மீன்களை தினமும் முகர்ந்து, உற்று வாழும் மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமெனில் உள்நாட்டு மீன் வளத்தை மேம்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தை பொறுத்தவரையில் பல்வேறு உள்நாட்டு நீர் வள ஆதாரங்களான, தீர் தேக்கங்கள், பெரிய சிறிய பாசன குளங்கள், பருவ மழையால் நிரம்பும் குறுகியக்கால குளங்கள், குட்டைகள், ஆறுகள், கழிமுகங்கள் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மீன்வளம் அதிகரிக்கப்பட வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம்.
மீன்வள பிரிவானது, கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. மீன், அதன் ஊட்டச்சத்து மற்றும் அதன் சுவைக்காக பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மீனவர்களின் நலனுக்காக, ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக, முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யவதற்காக, மீன் வளத்தை பாதுகாத்தல், நிலையான மீன்பிடிப்பு மற்றும் மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்க, பல்வேறு,
புதுமையான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மீன்பிடி படகுகளை பாதுகாப்பாக நிறுத்திட, மீன்பிடிக்கும் இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையகப்படுத்துவதை உறுதிப்படுத்த, மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள் ஆராய்ச்சி மையம், கல்லூரிகளின் பங்களிப்பு தேவைப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை சாத்தனூர் அணையானது உள்நாட்டு மீன் வளத்திற்கு சிறந்த நீர்வள ஆதாரமாக விளங்கி வருகிறது.
செண்பகத்தோப்பு அணை, மிருகண்டா நதி அணை, குப்பணந்தம் அணை, தென்பெண்ணையாறு, செய்யாறு ஆகிய ஆறுகளும் இம்மாவட்டத்தில் தமிழ்நாட்டு நீர்வள ஆதாரமாக உள்ளது. எனவே, இப்பகுதியின் வளர்ச்சிக்காக இந்தப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மீனவ இன மக்களுக்காக இந்த மாவட்டத்தில் அரசின் சார்பில் ஒரு மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அரசின் மூலமாக அமைத்து தர வேண்டும்.
கடலோர மாவட்டங்களில் மட்டுமே மீன்வள கல்லூரிகள் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கின்றன. உள்நாட்டு மீன்வளத்தை பெருக்கும் வகையில் புதிய மீன்வள கல்லூரிகளை அமைப்பதன் மூலம் கல்வியில் சிறப்புத்தன்மை, ஆராய்ச்சியில் தனித்தன்மை, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, என்ற மூன்று இலக்குகள் மூலம் இளைஞர்களை மீன் வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த தொழில் முனைவோர்களாக ஆக்குவதற்காகவும், ஆலோசகர் ஆக்குவதற்காகவும், திறன் சார்ந்த கல்வி அளிப்பதற்காகவும், உள்தர அளவீடு அமைப்பு மூலம் கல்வி அளிப்பதற்காகவும், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்காகவும், போன்ற பல்வேறு வசதிகளை பெற்றிட திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணை பகுதியில் அல்லது மீனவர் சமுதாயம் மிகுந்த போளூர் சட்டமன்ற தொகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் அரசு மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்து தருமா?
இவ்வாறு முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ பேசினார்.