தற்போதைய செய்திகள்

மதசார்பற்ற அரசு என்று பெயர் வைத்தால் போதாது- நடைமுறையிலும் இருக்க வேண்டும்

பேரவையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு

சென்னை

சர்க்கரை என்று பேப்பரில் எழுதிக்கொடுத்தால் இனிக்காது. மதசார்பற்ற அரசு என்று பெயர் மட்டும் வைத்தால் போதாது, அது நடைமுறையிலும் இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு பொற்கால அரசு என்று சொன்னதற்காக அம்மாவின் சில சாதனைகளை எடுத்து சொன்னேன். அதேபோன்று அதற்குப்பின்னால் வந்த எடப்பாடியார் அரசும், புரட்சித்தலைவி அம்மா கடைபிடித்தவாறு கிராமப்புற சிறு கோயில்களுக்கு மற்றும் திருக்கோயில்களுக்கெல்லாம் ஆதி திராவிடர் பழங்குடியினர் நடத்தும் கோயில்களுக்கு தொடர்ந்து குடமுழுக்கு செய்கின்றபணிகளை செய்து வந்தது.

அதேபோன்று இந்து சமய அறநிலையத்துறையின் முக்கியமான பணிகளில் ஒன்று கோயில் வளாகத்தின் முன்பு இருக்கின்ற திருக்குளங்களை தூர்வாரி தூய்மைப்படுத்தி வைக்கின்ற அருமையான பணி. அந்த பணியையும்

புரட்சித்தலைவி அம்மா தொடங்கிவைத்தார்கள். அதை நீங்களும் தொடர்கிறீர்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எந்தெந்த திட்டங்களையெல்லாம் புரட்சித்தலைவி அம்மா முதன்முதலில் தொடங்கினார்கள் என்பதற்காக சொல்கிறேன். அவ்வாறு தொடங்கிய திட்டங்களை நீங்கள் தொடர்கிறீர்கள் என்று சொன்னேன். அதற்காகத்தான் சொன்னேன்.

அடுத்து கோவில்களுக்கு செய்கின்ற பணிகளில் முக்கியமான பாணி திருத்தேர்கள் செய்கின்ற பாரி. திருத்தேர்கள் செய்கின்ற பணியையும் முதன் முதலாக தொடங்கி வைத்தது புரட்சித்தலைவி அம்மா.

அந்த பணியையும் நீங்கள் தொடர்கிறீர்கள். அதேபோன்று அம்மாவின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு கோயில்களுக்கும் அந்தந்த கோயில்களின் தேவையை அறிந்து, அங்கே வருகின்ற பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

குறிப்பாக அவர்களுக்கு தங்குகின்ற வசதிக்காக, அவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய யாத்ரி நிவாஸ் போன்ற கட்டடங்களை கட்டினார். பக்தர்கள் தங்குவதற்கு, அனைத்து அடிப்படை வசதிகளுடன், அவர்களுக்கு பயன்படுகின்ற வகையில் அனைத்து முக்கிய கோயில்களிலும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்.

அதுமட்டுமல்ல, ஒரு கால பூஜைக்காக நிதியுதவி அளித்தார். கிராமப்புறங்களில் இருக்கின்ற 10,000-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு ஒரு கால பூஜை நடத்துவதற்கு திட்டங்களை செயல்படுத்தினார்.

அதேபோன்று, 10,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு பூஜைக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக நிதியுதவியை அளித்தார். இப்படி, அவர் ஒரு திருத்தொண்டர் போலவே பல்வேறு திட்டங்களை மிக சிறப்பாக செயல்படுத்தினார். அதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு அந்த துறையின் மீது இருந்த ஈடுபாட்டுணர்வு ஆகும். அதனால், அவரால் அந்த சாதனைகளை செய்ய முடிந்தது.

நான் இப்போது கேட்க விரும்புவது என்னவெனில், நமது முதலமைச்சர் பற்றி நான் ஒன்றும் செல்லவில்லை. அவரிடம் நான் ஒரு விளக்கத்தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். இந்திய அரசு என்பது ஒரு Secular Govemment, அதாவது மதச்சார்பற்ற அரசு. அதேபோன்று, மாநில அரசும் மதச்சார்பற்ற அரசு தான்.

மதச்சார்பற்ற அரசு என்றால், எந்த மதத்தையும் ஒதுக்காமல், அனைத்து மதத்தினரையும் சமமாக பாவிப்பது ஆகும். அது தான் உண்மையான மத சார்பற்ற அரசாகும். மத சார்பற்ற அரசு என்று பெயர் மட்டும் வைத்தால் போதாது. சர்க்கரை என்று பேப்பரில் எழுதி கொடுத்தால் இனிக்காது. அது நடைமுறையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன் எம்.எல்.ஏ.பேசினார்.