தற்போதைய செய்திகள்

விடியா தி.மு.க ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு இது தான் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு

மதுரை

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு. கடும் மின்வெட்டு. விலைவாசி உயர்வு. இதுதான் தி.மு.க. ஆட்சியின் ஓராண்டில் மக்களுக்கு கிடைத்த பரிசு என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள கூடக்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் பணியை முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.

அப்போது அவருடன் ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம், கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், கழக இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.கே.பி.சிவசுப்ரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் கூறியதாவது:-

கடந்த பத்து ஆண்டுகளில் அம்மாவின் அரசு எண்ணற்ற சாதனை திட்டங்களை செய்தது உள்ளது. குறிப்பாக 56 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, 12 லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், 3 லட்சம் உழைக்கும் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் என இப்படி திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் சட்டமன்ற 110விதியின் கீழ் 1074 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன அதில் 1167 பணிகள் முடிவடைந்து விட்டன 491 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இப்படி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 97 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி திட்டங்களை நூற்றுக்கு நூறு நிறைவேற்றி மக்களின் கையில் அம்மாவின் அரசு கிடைக்க செய்துள்ளது

ஆனால் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். நாங்கள் பெருமளவு நிறைவேற்றியுள்ளோம் என்று கூறுகிறார்கள்.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கினார்களா, கேஸ் மானியம் 100 ரூபாய் கொடுத்தார்களா, நீட் தேர்வை ரத்து செய்தார்களா, முதியோர் ஓய்வூதிய தொகை 1,500 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார்களா? வருடாவருடம் பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்டு வரும் விலையில்லா வேட்டி-சேலைகள் கூட மக்களுக்கு கொடுத்தார்களா? எதையும் மக்களுக்கு செய்யவில்லை.

கடந்த அம்மா ஆட்சி காலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தது ஏன் அம்மாவின் அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடி ஆட்சியில் கூட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள மாநிலமாக சென்னை திகழ்கிறது.

என்றும் சிறந்த காவல் நிலையங்களாக கோயமுத்தூர், பெரியகுளம் ஆகியவற்றை மத்திய அரசு தேர்ந்தெடுத்தனர். தற்போது நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொலை கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் குறிப்பாக லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கடும் மின்வெட்டு இருந்தது. அதனை தொடர்ந்து அம்மா ஆட்சி பொறுப்பு ஏற்று தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றினார்.

தமிழகத்தில் மின்வெட்டு என்ற சொல் இல்லாமல் இருந்தது தற்போது திமுக ஆட்சிக்கு அந்த ஒரு ஆண்டுக்குள் தமிழகத்தில் கடும் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இந்த மின்வெட்டுகளால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் உள்ள 15 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உள்ளன. ஆனால் பெயரளவில் மட்டும் பெட்ரோல் விலையை குறைத்து விட்டு தி.மு.க மக்களை ஏமாற்றுகிறது. தற்போதைய பெட்ரோல். டீசல் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து விட்டன.

தற்போது வெளிநாடு சென்று தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளோம் என்று பெருமையாக ஸ்டாலின் கூறுகிறார். இன்றைக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்மையில் தமிழகம் 15-வது இடத்தில் இருக்கிறது.

ஆனால் இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தமிழகம் வேலைவாய்ப்பு அளிப்பத்தில் முதலிடத்தில் இருந்தது.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.