சிறப்பு செய்திகள்

அமைச்சர்கள் பேச வேண்டியதை செல்வபெருந்தகை பேசுகிறார் – கொறடா எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

சென்னை

எப்போது எதிர்க்கட்சித்தலைவர் பேசினாலும் அமைச்சர்கள் பேச வேண்டியதை செல்வபெருந்தகை பேசுகிறார் என்று பேரவையில் கழக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தருமபுரம் ஆதினம் பட்டின பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை பல்லக்கில் சுமந்து செல்வதை சரி என்று சொல்வது எந்த விதத்தில் சரியாகும் என்று சில கருத்துக்களை தெரிவித்து பேசினார்.இதற்கு கழக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது கழக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுந்து ஒரு முக்கியமான பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் முதல்வர் கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார். அது முக்கியமான பிரச்சினை. இதற்கு அமைச்சர் பதில்
சொல்வார்.

இது சென்சிடிவ் ஆன பிரச்சினை. ஆனால் காங்கிரஸ் கட்சி தலைவர் எப்போது எதிர்க்கட்சி தலைவர் ஒரு முக்கியமான பிரச்சினையை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தால், அமைச்சர் சொல்ல வேண்டிய பதிலை அவரே சொல்கிறார்.

எப்போது பார்த்தாலும் கவுன்டர் கொடுத்துப் பேசுகிறார். அது எப்படி சரியாக இருக்கும்? முதல்வர் என்ன பார்வையில் முடிவு எடுக்கப்போகிறார், அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று யாருக்கும் தெரியாது என்று பேசினார்.