தி.மு.க. வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் மறக்காது, மன்னிக்காது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு
சென்னை, மே 6-
மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது, அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் ஒரு போதும் மறக்காது, மன்னிக்காது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் தமிழ்நாடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 39-வது வணிகர் தின மாநாட்டில் பேசியதாவது:-
அம்மாவும், அ.தி.மு.கவும் அன்று நாடாளுமன்றதில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால், தமிழ்நாட்டில் உள்ள லட்சோப லட்ச சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலை உருவாகியிருக்கும்.
இன்று வணிகர்களின் காவலனாக தன்னை காட்டிக்கொள்ளும் திராவிட முன்னேற்ற கழகம் அன்று மத்தியில் அரசாண்ட காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சிறு வணிகத்தில் அன்னிய முதலீட்டு மசோதா வாக்கெடுப்புக்கு வந்த போது, அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக திராவிட முன்னேற்ற கழகம் வாக்களித்ததை வணிகர்கள் சமூகம் ஒரு போதும் மறக்காது, மன்னிக்காது.
வால்மார்ட் என்று ஒரு அன்னிய நாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் நுழைய முற்பட்டபோது அதை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்து தமிழகத்தில் உள்ள வணிகர்களின் நலனை காத்தது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு.
எனது தலைமையிலான அம்மாவின் அரசு வணிகர்களின் நலனுக்காக செய்த நடவடிக்கைகள் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழகத்தை சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த சரக்குகள் மற்றும் சேவைகளின் மீதான வரிவிலக்கு, வரிக்குறைப்பு மேற்கொள்வது தொடர்பான கருத்துருக்கள், சரக்குகள் மற்றும் சேவைகள் மன்றத்தில் முன் வைக்கப்பட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்ற கூட்டங்களின் போது தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட சீரிய முயற்சிகளின் விளைவாக 39 சரக்குகள் மற்றும் 11 சேவைகளின் மீதான விரிவிலக்கு, வரிகுறைப்பு அளிக்கப்பட்டது.
சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மற்றும் இதர வரி சட்டங்களுக்கான துறையின் மென்பொருள்கள் மற்றும் மின்வழி சீட்டு ஆகிய மென்பொருள்களின் பயன்பாடுகள் மீது வரி செலுத்துவோருக்கு உதவுவதற்காக எந்நேரமும் (24X7) இயங்கக்கூடிய Help Desks கிரீம்ஸ் சாலையில் உள்ள வணிகவரி கட்டடத்தில் எனது தலைமையிலான அம்மாவின் அரசால் அமைக்கப்பட்டு, இன்றும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதற்கென தனியாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கக்கூடிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிறு வரி செலுத்துவோர் பயன்பெறும் வகையில் மாதாந்திர நமுனாக்களை மின்னணு முறையில் சமர்ப்பிக்க உதவுவதற்காக சென்னை மற்றும் கோவையில் அலுவலக நாட்களில் மட்டும் செயல்படும் இலவச உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையங்களில் எவ்வித கட்டணமின்றி வரி செலுத்துவோர் தங்களது நமுனாக்களை சமர்ப்பித்து கொள்ளலாம். புதிய பதிவு மற்றும் வரி திருப்புகை போன்ற பிற இணையவழி சேவைகளையும் எவ்வித கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் நலத்தினை கருத்தில் கொண்டு, வணிகர் நல வாரிய தொகுப்பு நிதியில் இருந்து 2018-ம் ஆண்டில் ரூ.30 லட்சத்திற்கான நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டு மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு அம்மாவின் அரசால் அனுப்பப்பட்டது.
கோவிட் நிவாரண நடவடிக்கையாக வணிகர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு ரூ.2,000/- (ரூ. 1,000 வீதம் இரண்டு தவணைகளில்) வழங்கப்பட்டது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுர் மாவட்ட உறுப்பினர்களுக்கு மேலும் ஒரு தவணை ரூ.1,000 வழங்கப்பட்டது. மொத்தமாக ரூ. 1.69 கோடி வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா காலத்தில் முழு அடைப்பின் போது வாழ்வாதாரத்தை இழந்து நின்ற சிறு வணிகர்களின் நலன் காக்க மாநராட்சி சார்பில் தள்ளு வண்டிகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய எனது தலைமையிலான அம்மாவின் அரசு சென்னை மற்றும் தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான வணிகர்களுக்கு உரிமம் வழங்கியதையும் நான் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.