சிறப்பு செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை – கே.பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு

சென்னை

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சென்னையில் தமிழ்நாடு மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 39-வது வணிகர் தின மாநாட்டில் பேசியதாவது:-

ஒரு நாட்டின் இன்ப வாழ்க்கைக்கு வணிகர்களை பாதுகாத்தல் முக்கியமானது என சங்க தமிழ் இலக்கியங்கள் கூறுவதை நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். ஆனால் தற்போது நடைபெற்று வரும் விடியா தி.மு.க அரசின் ஆட்சியில் வணிகர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் வருகிற செய்திகளை பார்க்கிறபோது வேதனையாக இருக்கிறது.

நேற்று முன்தினம் ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு வியாபாரி ஒருவரிடம் பொருள் ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான பணத்தை கேட்டதற்கு பட்டா கத்தியை உருவி காட்டி மூன்று ரவுடிகளால் அந்த வியாபாரி மிரட்டப்படுவதை வலை தளங்களில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.

இந்த காட்சி தற்போது தமிழ்நாட்டில் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதை அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை போல இந்த ஒரு காட்சி தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையை விளக்கி நிற்கிறது.

தமிழ்நாட்டை அ.தி.மு.க ஆட்சி செய்யும் போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதால் வியாபாரிகள் எந்த அச்சுறுத்தலும் இன்றி நிம்மதியாக தொழில் செய்யும் நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது பரோட்டா கடையில் சாப்பிட்டு விட்டு காசு கேட்டால் உதைப்பதும், கடையை மூடிவிட்டு சென்ற பிறகு கடை முன்பு இருக்கிற கடப்பா கல்லைக்கூட களவாடி செல்கிற நிலையும் உள்ளது.

வியாபாரிகள் கடையை திறந்தால் மாமூல் கேட்பது, தராவிட்டால் வியாபாரி மீது வன்முறையை ஏவி விடுவது, தாக்குவது, கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்லும் வணிகர்களின் கைப்பையை வழிப்பறி செய்வது, மூடியுள்ள கடைகளில் துளையிட்டு கொள்ளை அடிப்பது என தமிழ்நாட்டில் வர்த்தகர்கள் ஒவ்வொரு நாளும் அஞ்சி நடுங்கி வாழும் நிலை தற்போதைய தி.மு.க. ஆட்சியில் நிலவி வருகிறது.

வணிகர்கள் என்பவர்கள் வேளாண் உற்பத்தி பொருட்களையும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபடுபவர்கள். உற்பத்தியாளர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் இடையே அச்சாணியாக திகழ்பவர்களும் நமது வணிகர்களே.

சமுதாயத்தில் வணிகர்கள் விற்பனை செய்வதாக இருந்தாலும் சரி, வாங்குவதாக இருந்தாலும் சரி, இவர்களுக்கு இடையே முக்கிய அங்கமாக விளங்கக்கூடிய பொறுப்பில் உள்ளவர்கள். அவர்கள் பணி மகத்தானது. வணிகர்கள் என்ற ஒரு இனம் இல்லை என்று சொன்னால் மக்களின் தேவை பூர்த்தி ஆகாது.

பன்னாட்டு நிறுவனங்கள் சிறு வணிகத்துறையில் கால் பதிப்பதை அம்மாவின் அரசு கடுமையாக எதிர்த்தது. அப்போது ஒரு சில வணிக அமைப்புகளும் எதிர்த்து குரல் கொடுத்தன. ஆனால் தற்போதை தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் சிறு வணிகத்தில் ஈடுபட துவங்கியுள்ளது.

வணிகர்களின் நலனுக்காக போராடுகிறோம் என்று சொல்லும் ஒரு சில அமைப்புகள் தற்போது வாய்மூடி மவுனியாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர்களும் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறு வணிகத்தில் கார்ப்ரேட் கம்பெனிகள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

முக்கியமா லூ லூ மார்க்கெட் போன்ற வணிக நிறுவனங்களும் இங்கு கால்பதிக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எந்த விதமான அரசியல் மாச்சரியங்களுக்கும் இடம் தராமல் வணிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.