தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை

முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

திருப்பூர்

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி உள்ளார்.

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் உடுமலை தாஜ் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் துபாய் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர கழக செயலாளர் ஏ.ஹக்கீம் வரவேற்றார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான செ.தாமோதரன் எம்.எல்.ஏ., தலைமைக்கழக பேச்சாளர் தென்றல் விஜய் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

உழைக்கும் வர்க்கத்தின் உன்னதம் அறிந்தவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் தொழிலாளர்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள்.

யார் என்ன வேலை செய்தாலும் அவர்கள் செய்யும் தொழிலின் தரத்தை உயர்த்தும் விதமாகத்தான் புரட்சித்தலைவர் தாம் நடித்துள்ள படிங்களில் விமர்சித்து காட்டுவார்கள். அதன்பிறகு தான் அந்தந்த தொழில் செய்வோரும் அதன் மேன்மையை அறிந்து கொண்டு நடந்தார்கள்.

விவசாயிகளின் மேன்மையை பறைசாற்ற விவசாயி, இரும்பு பட்டறை தொழிலாளர்களை ஊக்குவிக்க தனிபிறவி, ரிக்‌ஷா ஓட்டுபவர்களுக்காக ரிக்‌ஷாக்காரன் போன்ற படங்களில் நடித்து அத்தொழிலின் மேன்மையை உணர்த்தினார்கள்.

ரிக்‌ஷாகாரன் படத்தில் நடித்த போதுதான் ரிக்‌ஷா ஓட்டுபவர்களின் நிலை அறிந்து அவர்களின் மீது கொண்ட பற்றால் மழை காலங்களில் மழையில் நனைந்தபடியே ரிக்சாவை இழுத்து செல்லும் அவல நிலையை நீக்க ரெயின் கோட் வழங்கி தொழிலாளர்களின் துன்பத்தை போக்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவர் பாணியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களும் தொழிலாளர்களின் மீது சிறிதளவும் பற்று குறையாமல் பார்த்துக் கொண்டார்கள். அதன் வெளிப்பாடு தான் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல வாரியங்கள் அமைக்கப்பட்டது.

விவசாயி தான் நாட்டின் ஆணிவேர் என்பதை அறிந்திருந்த புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வழி வகை செய்தார்.

விவசாயிகள் வயதாகி நலிவடையும் பொழுது அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் வரை இலவச மருத்துவ செலவு மேற்கொள்ள வழிவகை செய்தார். கருவறை முதல் கல்லறை வரை எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து தமிழக மக்களின் வாழ்க்கை உயர பாடுபட்டார்.

கழக ஆட்சியில் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு மகத்தான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் வழியில் கழக ஒருங்கிணைப்பாளர்களும் சிறப்பாக அத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தொழிற்சாலையில் பணிபுரியும் தமிழ்நாட்டு மக்களுக்கு 75 சதவீத வேலை உத்தரவாதம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை செயல்படுத்தவில்லை.

ஏழை, எளியோரின் கட்சி கழகம். இதயதெய்வம் அம்மா அவர்கள் கழகம் என்ற பேரியக்கத்தை கட்டி காத்து 18 லட்சம் தொண்டர்கள் இருந்த இயக்கத்தை, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்.

மூன்றாவது பெரிய தேசிய கட்சியாக உருவாக்கிய பெருமை அம்மா அவர்களை சாரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு பிறகு அவருடைய வாரிசாக அம்மா அவர்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் 30 ஆண்டு காலம் கழக ஆட்சி நடைபெற்றது. 19 ஆண்டு காலம் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. கழக ஆட்சியில் இஸ்லாமிய மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யப்பட்டது. ரமலான் பண்டிகை நேரத்தில் இலவசமாக நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு பல ஆயிரம் டன் அரிசி வழங்கப்பட்டது.

இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள நிதிஉதவி, உலமாக்களுக்கு பென்ஷன் திட்டம், நாகூர் தர்காவிற்கு சந்தனக்கட்டை ஆகியவை வழங்கப்பட்டது. 30 ஆண்டு கால கழக ஆட்சியில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கு கூட ஏற்பட அனுமதிக்கவில்லை. சிறுபான்மை மக்களுக்கு என்றுமே கழகம் பாதுகாப்பாக விளங்கும் என்பதை இந்நாளில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.