தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக மக்கள் வேதனை- அ.தமிழ்மகன்உசேன் பேச்சு

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை அரங்கேறி வருகிறது. திமுக அரசின் அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என நாள்தோறும் நடந்த வண்ணம் உள்ளது. இந்த ஆட்சியை தெரியாமல் கொண்டு வந்து விட்டோமே என தமிழக மக்கள் வேதனைப்படுகின்றனர் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற மேதின கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பாக மே தின விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல் நகரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன், தலைமை கழக பேச்சாளர் ருத்ராதேவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் வக்பு வாரிய தலைவருமான அ.தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் நடத்திடும் உன்னதமான விழா மே தின விழா. உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம், என்கிற கோரிக்கையை வென்றெடுத்த தினம் தான் மே 1. இந்த நாள் நாடு முழுவதும் தொழிலாளர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மே தினம் அன்று விடுமுறை என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால், அந்த விடுமுறைக்கு பின்னால் உள்ள வரலாறுகள் நீண்ட நெடியதாகும்.

18ம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த மேலை நாடுகளில் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 முதல் 18 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என உத்தரவு. இதற்கு எதிரான போராட்டங்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே நடைபெற்றன. பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ரஷ்யா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் இந்த கட்டாய வேலை நேரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்தனர்.

இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் அதற்கு எதிராக தொடர் போராட்டங்களை தினமும் நடத்தியது. பிரான்ஸ் ல் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தினமும் கட்டாயமாக பதினைந்து மணி நேர உழைப்பு சுரண்டலுக்கு எதிராக 1834 ல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோசத்தை முன் வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் பெரும் துன்பங்களுக்கு ஆனான ரஷ்யா தொழிலாளர்களில் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்ய புரட்சிக்கு வித்திட்டது. 1850ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பெல்போர்னில் கட்டிட தொழிலாளர்கள் முதன் முதலாக 8 பணி நேர வேலை கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றியும் கண்டனர். இது தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டத்தில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்தது.

தொடர்ந்து பல கட்ட போராட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடைபெற்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தொழிலாளர் கூட்டமைப்புகள் எல்லாம் இணைந்து அமெரிக்க தொழிலாளர்கள் கூட்டமைப்பு என்கிற இயக்கம் தொடங்கப்பட்டது. எட்டு மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து போராடி வந்தது.

தொழிலாளர்களின் தொடர் போராட்டத்தால் அமெரிக்கா பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து நடைபெறவில்லை, தொழிலாளர்களின் ஊர்வலங்கள். அமெரிக்காவை உலுக்கியது.

இப்படியிருக்க கடந்த 1886-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி அன்று சிகாகோ நகரில் அமைதியான ஊர்வலம் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். மேலும் பலர் தாக்கப்பட்டனர். தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பர்ட் பர்சன்ஸ், அடொல்ப் பிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

இவர்களது இறுதி ஊர்வலத்தில் அமெரிக்கா தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 இலட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு அமெரிக்கா முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியே மே 1 ஐ எண்ணிப் பார்க்க வைத்தது. 1886-ம் ஆண்டு நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அமெரிக்கா தொழிலாளர்கள் கூட்டமைப்பு அன்றைய அறைக்கூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாக அமைந்தது.

உலகத்தொழிலாளர்களின் காரணத்தை கண்டறிந்த பொதுவுடைமை தலைமையில் கொள்கையை உலகுக்கு தந்த ஆசான் காரல் மார்க்ஸ். உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் இந்த மே தின வெற்றி நிலைநாட்டப்பட்டது. சிகாகோ தியாகிகளின் தியாகமும் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும் இன்றைக்கு மே 1 ஐ உழைப்பாளர் தினமாக நம்முன் நிற்கிறது.

இந்தியாவில் முதன் முதலில் சென்னையில்தான் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமை சீர்திருத்தவாதியான சிங்காரவேலர் 1923ல் மெரினா கடற்கரையில் தொழிலாளர் தின விழாவை கொண்டாடினார். அதில் தோன்றியது தான் சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை.

உழைப்பே உயர்வை தரும் என்ற அடிப்படையில் தான் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா என மூன்று தலைவர்களும் உழைக்கும் தொழிலாளர்களின் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றினார்கள். தமிழகத்தில் மே தினத்தை கொண்டாட வேண்டும் என கூறியவர் பேரறிஞர் அண்ணா.

உதிரத்தை கொடுத்து உழைக்கின்ற வழக்கம் தொழிலாளர் வர்க்கம். அவர்களுக்கு உதவி செய்கின்ற ஆயுதம் தான் ஸ்பானர். அந்த ஸ்பானரைத்தான் அண்ணா தொழிற்சங்க கொடியில் இடம் பெற செய்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அந்த மாபெரும் தலைவர்களின் வழியில் தொழிலாளர்களின் நலம் கருதி முன்னாள் முதல்வர்கள்எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது கழக ஆட்சியின் போது தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை தந்து உழைக்கும் வர்க்கத்தினரை வாழ வைத்தார்கள்.

கழகத்தின் வரலாற்றை இஸ்லாமியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கழகத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக தனது உயிரை மாய்த்தவர் உடுமலைப் பேட்டையை சேர்ந்த மைதீன் என்ற இஸ்லாமியர்.1972ல் புரட்சித்தலைவர் தனிக்கட்சி துவங்க வேண்டுமென போராடியவன் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் எனும் நான். இஸ்லாமியர்களை என்றென்றும் பாதுகாக்கக்கூடிய இயக்கம் அ.தி.மு.க.

திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியில் நான்தான் முத்தமிழ் முத்தமிழ் என அறைகூவல் விட்ட கருணாநிதி பிஜேபியுடன் கூட்டணி வைக்கவில்லையா? பிஜேபி மந்திரி சபையில் திமுக இடம் பெற வில்லையா? அ.தி.மு.க பிஜேபியுடன் கூட்டணி வைப்பதா என்று கூறுகிறீர்களே இதில் என்ன நியாயம் இருக்கிறது. இஸ்லாமியர்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று இன்று தி.மு.க. கோட்டையில் அமர்ந்து உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தொழிலாளர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அம்மாவின் ஆட்சியில் தான் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின் மூலம் ஓய்வூதிய திட்டத்தையும் தொழிலாளர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா வழங்கினார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, அவர்களுக்குப் பின்னர் எடப்பாடியார் ஆகியோர் தாய்க்கு நிகராக தொழிலாளர்களை நினைத்து ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்தினர். அவர்ஆட்டோ ஓட்டுனராக இருந்தாலும் சரி, போக்குவரத்து தொழிலாளர்கள் இருந்தாலும் சரி, மின்வாரிய தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, கைத்தறி தொழிலாளர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையும், பென்சன் திட்டத்தையும் கொண்டுவந்த அற்புதமான இயக்கம் அதிமுக. இந்த விடியல் அரசை விடியா அரசாக மாற்றுகின்ற வாய்ப்பை பிரதமர் மோடி சீக்கிரம் தருவார் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மனதில் வந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததற்காக தமிழக மக்கள் வேதனைப்படுகின்றனர். அடக்குமுறை, அதிகார துஷ்பிரயோகம், அதிகாரிகள் மீது தாக்குதல் என அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை தினந்தோறும் அரங்கேறி வருவது மிக வேதனையான செயல்.

இவையெல்லாம் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க ஆட்சி என்பதை தமிழக மக்கள் மறக்கக்கூடாது. கூடிய சீக்கிரம் தி.மு.க அரசுக்கு அழிவு காலம் வரப்போகிறது என்பது உண்மை. விரைவில் நாடாளுமன்றத்தேர்தல் வருவதற்கு முன்னாலேயே மு.க.ஸ்டாலின் அரசு வீதிக்கு வரும். அதற்கான சூழலை தமிழக மக்கள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று மே தினத்தில் சூளுரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.