தமிழகம்

துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி

கழக ஆட்சி மீண்டும் மலரும்- ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை,

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் படும் ஓயாத துன்பங்கள் குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாக்குறுதிகள் தான் நிறைவேற்றப்படவில்லை, நேர்மையான, சுதந்திரமான, நியாயமான, நீதி தவறாத ஆட்சி நடக்கிறதா என்றால் அதுவும் இல்லை. மக்கள் அன்றாடம் வேதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. கவுன்சிலர்களால் மக்கள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது.

தினந்தோறும் பத்திரிகைகளை திறந்தாலே பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, அரசு நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் அராஜகங்கள், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, கொலைகள், கொள்ளைகள், காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுதல், பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுதல், சாதிக்கலவரங்கள், மாணவர்கள் ஆசிரியரை தாக்குவது என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

காவல்துறையினரை பார்த்து ரவுடிகள் நடுங்கி கொண்டிருந்த நிலை மாறி, ரவுடிகளையும், தி.மு.க.வினரையும் பார்த்து காவல்துறையினர் அஞ்சுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அச்சத்தின் உச்சத்தில் உள்ளார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருக்கிறது.

சட்டம்-ஒழுங்கு தான் இப்படி என்றால், மின்சாரத்துறை இதைவிட மோசமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே மின்வெட்டு என்பது அடிக்கடி ஏற்படுகிறது என மக்கள் தெரிவிக்கிறார்கள். எரிசக்தித்துறை அமைச்சரிடம் மின் வெட்டு குறித்து கேட்டால், நிலக்கரி பற்றாக்குறை என்கிறார். ரயில் பெட்டிகள் பற்றாக்குறை என்கிறார்.

மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது, தி.மு.க.வின் முந்தைய ஆட்சி தான் மக்கள் நினைவில் உடனடியாக வருகிறது. இந்த நிலைமை நீடித்தால், தமிழ்நாடு இருளில் மூழ்கி விடுமோ, தமிழ்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலை மக்களிடையே வந்துவிட்டது.

தி.மு.க. அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது, கட்டுமான பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டே இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்பட மாட்டாது என்ற வாக்குறுதியையும் மீறி, சொத்து வரியையும், குடிநீர் வரியையும் உயர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெயை தி.மு.க. ஊற்றியிருக்கிறது.

இது போதாது என்று அம்மா அவர்களுடைய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களிடம் அமோக வரவேற்பினை பெற்ற திட்டமான அம்மா உணவகங்களை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்துள்ளது. மகளிருக்கு நன்மை பயக்கக்கூடிய அம்மா இரு சக்கர வாகனத்திட்டம், தாலிக்குத்தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக்குகள் ஆகியவற்றிற்கு மூடு விழா நடத்தியுள்ளது தி.மு.க. அரசு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்காலத்தில் அளிக்கப்பட்ட 2,500 ரூபாய் பொங்கல் பரிசு நிறுத்தப்பட்டு வெறும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டும் அளிக்கப்பட்டது.

சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட இந்த பரிசு தொகுப்பினால் எந்தப்பிரிவு மக்களும் பயனடையவில்லை. பயனடைந்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மொத்தத்தில் மக்கள் பணம் 1,200 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது தான் மிச்சம்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது தேசியக்கல்வி கொள்கையை கடுமையாக எதிர்த்தவர் மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் மாநிலக்கல்வி கொள்கைக்கு இப்போது தான் குழு போடப்பட்டு இருக்கிறது. இது தி.மு.க. மென்மையான போக்கை கடைபிடிக்கிறதோ, இரட்டை வேடம் போடுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‘

மகரிஷி சரக் சபத்’ குறித்து தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கெனவே அறிவுரை வழங்கிய நிலையில், அதுகுறித்து தி.மு.க. அரசு தெளிவுபடுத்தாதது தான் மருத்துவ மாணவர்கள் மேற்படி முறையில் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டதற்கு காரணம் என்பது தற்போது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதிலும் இரட்டை வேடமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.

இதேபோன்று, எதிர்க்கட்சியாக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அடிக்கடி குரல் கொடுத்த தி.மு.க., ஏழு பேர் விடுதலை குறித்து குரல் கொடுத்த தி.மு.க., பூரண மதுவிலக்கு என்று குரல் கொடுத்த தி.மு.க., இவை குறித்து பேசாமல் வாய்மூடி மவுனியாக இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

‘காவல்துறை கட்டுப்பாட்டில் ஏற்படும் தொடர் மர்ம மரணங்கள்’ ‘தருமபுர ஆதீன விவகாரம்’, ‘டாஸ்மாக் பார் விவகாரம்’ உள்ளிட்ட பலவற்றில் தி.மு.க. அரசின் அணுகுமுறையைக் கண்டு மக்கள் முகம் சுளிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

நீட் தேர்வு ரத்து பிரச்சனையில் மேதகு ஆளுநரை எதிர்க்கின்ற தி.மு.க. அரசு, வரிப்பகிர்வு விஷயத்தில் மத்திய அரசை எதிர்க்கின்ற தி.மு.க. அரசு, முல்லைப்பெரியாறு விஷயத்தில் பல்வேறு இடையூறுகளை தமிழ்நாட்டிற்கு அளித்துக்கொண்டிருக்கின்ற கேரள அரசை எதிர்க்கவோ, மேகதாது அணை பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்க்கவோ தி.மு.க. தயக்கம் காட்டுவது வியப்பாக இருக்கிறது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் போலும்.

மொத்தத்தில், மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி என்பதை தமிழக மக்கள் உணர்ந்து விட்டார்கள். “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்” என்பதற்கேற்ப அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி மீண்டும் மலரும்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.