தற்போதைய செய்திகள்

காரமடையில் ரூ.30 லட்சத்தில் மருத்துவ மரப்பூங்கா – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார்

திண்டுக்கல்

பழனி வட்டம், காரமடையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ மரப்பூங்காவை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வையாபுரிகுளம் காரமடையில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட மருத்துவ மரப்பூங்கா திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டு மரப்பூங்காவை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் 72 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த பணி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. மரக்கன்று நடும் பணியை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், பெரிய அளவிலான குடியிருப்புகளில் நடப்பட்டு, பராமரித்து பாதுகாக்கப்படும்.

சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாப்பயணிகளுக்காக வனத்துறை மூலம் பல்வேறு திட்டங்கள் அறிவித்து, செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் சிறுமலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் உயிர்பன்மை பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்மிக தலமான பழனியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறுவதற்காக இந்த மருத்துவ மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பகுதியில் மூலிகை மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. மெய்யறிவு வாய்ந்த சித்தர்கள் பலர் மருத்துவ குணம் படைத்த மூலிகை மரங்களை சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்கள். இதனை வருங்கால இளம் தலைமுறைக்கு சித்த ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி எதிர்காலத்தில் சித்த ஆயுர்வேதத்தின் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்திடும் வகையில் இந்த மருத்துவ பூங்கா மூன்று ஆண்டுகளில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் பழனி நகர் வையாபுரி குளத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் மருத்துவத் தன்மை வாய்ந்த நாவல், தாணி, நெல்லி, வேம்பு, நீர்நொச்சி, வேங்கை, அகத்தி, குமிழ், புங்கம், மகிழம், பொன்மூங்கில் உள்ளிட்ட 78 வகையான 10,000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்காவில் மக்களின் பயன்பாட்டிற்கு நடைபாதை வசதி, கழிப்பறை வசதி, ஓய்வு எடுப்பதற்கான குடில், மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் பெயர் பலகை மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

அதனைத்தொடர்ந்து, மருத்துவ பூங்கா குறித்த கையேடுகளை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வெளியிட்டு, பேட்டரி கார் மூலம் துறை அலுவலர்களுடன் சென்று மருத்துவ மரப்பூங்காவை சுற்றி பார்வையிட்டார். இவ்விழாவில் பழனி சார் ஆட்சியர் உமா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் துறைத்தலைவர் பெ.துரைராசு, திண்டுக்கல் மண்டல தலைமை வன பாதுகாவலர் வே.திருநாவுக்கரசு, முதன்மை வன பாதுகாவலர் நாகநாதன், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் வி.மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், ஆவின் தலைவர் எ.டி.செல்லச்சாமி, அறங்காவலர்கள் தேர்வு குழு தலைவர் பிரேம்குமார், மாவட்ட வன அலுவலர்கள் ச.வித்யா, தேஜஸ்வி, பழனி வனச்சரக அலுவலர் நா.விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.