ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி
சென்னை
முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் தி.மு.க. அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.
விசாரணை கைதி விக்னேஷ் வழக்கை சிபிஐ.யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று முன்தினம் வெளிநடப்பு செய்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் கூறியதாவது:-
கேள்வி: பேரவையில் இரண்டு விஷயங்கள் குறித்து வலியுறுத்தீர்களே.
தருமபுரம் ஆதீனம் 500 ஆண்டுகளுக்கு மேலாக பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். அதற்கு அங்கு இருக்கின்ற மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தடை விதித்திருக்கிறார்கள். இது ஆன்மீகம் சார்ந்த விஷயம். தி.மு.க அரசு அவர்களை பழிவாங்குகின்ற நோக்கத்தோடு, அவர்கள் இந்த பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்துள்ளார்கள்.
இது காலங்காலமாக நடைபெற்று வருகின்ற ஒரு நிகழ்வு. அதுவும் அங்கே இருக்கின்ற பல்லக்கு தூக்குபவர்கள் அந்த பட்டின பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதனை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.அதுவும் அந்த ஆதீன எல்லைக்குள் தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
இதனை தடை செய்யவே அவர்களுக்கு அதிகாரம் இல்லை. இருந்தாலும் வேண்டுமென்றே திட்டமிட்டு, சில அரசியல் காரணத்திற்காக இந்த பட்டின பிரவேச நிகழ்ச்சியை மாவட்ட வருவாய்த்துறை தடை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.
இதுகுறித்து மதுரை ஆதீனம் கருத்து தெரிவித்ததை காரணம் காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதுவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே ஆன்மீகத்தில் இந்த அரசு தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதோடு மட்டுமல்லாமல் முதலமைச்சர் பொதுவானவர். எங்கள் உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் சட்டமன்றத்திலே பேசினார்.
அவரின் கருத்தை சொன்னார். முதலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சமமானவர். பல்வேறு மதங்களுக்கு பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும் வாழ்த்து சொல்லிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்று குறிப்பிட்டார். உடனே அதனை அவை குறிப்பிலிருந்து பேரவை தலைவர் நீக்கி விட்டார். நான் அது குறித்து மீண்டும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
ஆகவே முதலமைச்சர் என்பவர் பொதுவானவர். அவர் எந்த கட்சியையும் சாராதவர். எந்த மதத்திற்கும் சாராதவர். ஆகவே பல்வேறு மதத்தை சார்ந்தவர்களுக்கு, பண்டிகை காலங்களிலும், திருவிழா காலங்களிலும் வாழ்த்து சொல்லுகின்ற போது ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை என்ற கேள்வி எழுப்பினோம். ஆனால் அதற்கு பதில் கிடைக்கவில்லை.
எனவே இன்றைக்கு ஆளுகின்ற முதலமைச்சர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும் என்பது எங்களுக்கு எண்ணம். கோரிக்கை. அதுதான் மக்களுடைய எண்ணமும் கூட.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.