தமிழகம்

ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிச்சம்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சென்னை

தமிழக சட்டப்பேரவையின் நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த பின்னர் தலைமை செயலகத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

இன்றைய தினம் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறுகின்றன. இந்த ஓராண்டு காலத்திலே திமுக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டதாக ஒரு பொய்யான விளம்பரத்தை இன்றைக்கு முதலமைச்சர் செய்தியின் வாயிலாக
வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத்தில் பேசியுள்ளார். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலே சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டு விட்டது. அதிமுக ஆட்சி காலத்திலே கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்று, அந்த முடிவுற்ற பணியை தான் தி.மு.க ஆட்சியிலே முதல்வர் இன்றைக்கு திறப்பு விழா செய்து வருகிறார்.

அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு, இன்றைக்கு அடிக்கல் நாட்டி கொண்டிருக்கிறார். இந்த ஓராண்டு தி.மு.க ஆட்சியில் எந்த ஒரு பெரிய புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நடைமுறைப்படுத்தவில்லை.

ஆனால் அம்மா அவர்கள் ஆட்சியிலிருந்த போதும் சரி, அம்மா மறைவுக்கு பிறகும் சரி, அ.தி.மு.க அரசு எண்ணற்ற திட்டங்களை தமிழகத்திலே நிறைவேற்றி அதனால் மக்கள் அதிக அளவில் நன்மை பெற்றிருக்கிறார்கள்.

அ.தி.மு.க ஆட்சி காலத்திலே சில திட்டங்களை ஊடகத்தின் வாயிலாக மக்களுக்கு தெரிவிப்பது எங்களின் கடமை என்ற அடிப்படையிலே நாங்கள் தெரிவிக்கின்றோம். 50 ஆண்டுகள் நிறைவேற்ற முடியாத காவிரி நதி நீர் பிரச்சினை, புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற பொழுதே உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி கொண்டிருந்தார்.

துரதிர்ஷ்டவசமாக இந்த மண்ணிலிருந்து அம்மா மறைந்தாலும், அம்மாவின் அரசு சட்ட ரீதியாக உச்சநீதி மன்றத்தில் சந்தித்து, 50 ஆண்டுகால விவசாயிகளுடைய பிரச்சினையை, உச்சநீதிமன்றத்தின் மூலமாக நல்ல தீர்ப்பை நாங்கள் பெற்றுத்தந்தோம்.

காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட அரசு அம்மாவின் அரசு. அதேபோல காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசு படுவதை தடுக்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் அரசு ஒரு அற்புதமான திட்டத்தை தீட்டி, பிரதமரை சந்திக்கும் போது நான் அதனை வழங்கினேன். பிரதமர் குடியரசு தலைவர் உரையில் அதனை இடம்பெற செய்தார்.

அம்மா அரசில் குடிமராமத்து திட்டம்

நடந்தாய் வாழி காவேரி என்ற அற்புதமான திட்டம், காவிரி நதி நீர் மாசுபடுவதை தடுப்பதற்கும், நம்முடைய கிளை
நதிகள் மாசுபடுவதை தடுப்பதற்கும் அந்த திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு அன்றைய தினம் ஏற்றுக் கொண்டது.

அதுபோல நீண்ட நெடிய நாட்களாக ஏரி, குளம், குட்டைகள் எல்லாம் தூர்வாரப்படாமல் இருந்த நிலையை மாற்றுவதற்காக பருவ காலங்களில் பெய்கின்ற மழை. நீர் ஒரு சொட்டுகூட பாழாகக் கூடாது என்ற அடிப்படையில் அம்மாவின் அரசு குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றினோம். கிட்டதட்ட சுமார் 5586 ஏரிகளை தூர் வாரியுள்ளோம். சுமார் 1132 கோடி இந்த குடிமராமத்து திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய அரசு அம்மாவின் அரசு.

அதுபோல இன்றைக்கு விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக அதிகமான இழப்பீட்டு தொகையை பெற்று தந்தது அம்மாவின் அரசு. சுமார் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை பெற்று தந்துள்ளோம்.

பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம்

அதேபோல புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற போது 2016 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் தொடக்க வேளாண்மை வங்கியிலே விவசாயிகளின் பயிர்க்கடன் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அதன்படி 5318 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 12 லட்சம் விவசாயிகள் பயனடைந்தார்கள்.

அதுபோல நான் முதலமைச்சராக இருந்த போது அம்மாவின் அரசு இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகள் எங்களை சந்தித்து, நாங்கள் தொடக்க வேளாண்மை வங்கியிலே வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை
வைத்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அம்மாவின் அரசு 12 ஆயிரத்து 110 கோடி கூட்டுறவு சங்கத்திலே வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இதனால் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றார்கள்.

அதேபோல 2017ம் ஆண்டு நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலம் கடுமையான வறட்சி. இதுவரை தமிழகத்திலே வறட்சிக்கு நிவாரணம் அளித்தது கிடையாது. முதல் முதலாக வறட்சிக்கு நிவாரணம் அளித்த அரசு அம்மாவின் அரசு. சுமார் 2247 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அள்ளி தந்த அரசு அம்மாவின் அரசு. உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக 826 கோடி ரூபாய்,10 லட்சத்து 41 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கியிருக்கின்றோம்.

காவிரி-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேற்றம்

அதுபோல 100 ஆண்டு கால கோரிக்கை. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம். மிகப்பெரிய திட்டம். அதையும் அம்மாவுடைய அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 5 மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சனையாக இருக்கின்ற காவிரி-குண்டாறு நதி நீர் இணைப்பு திட்டமும் நிறைவேற்றப்பட்டது. 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முதற்கட்ட பணியை துவக்கிய அரசும் அம்மாவின் அரசு தான்.

அதேபோல ஆதனூர் குமாரமங்கலத்திலே சுமார் 496 கோடி மதிப்பீட்டிலே கதவணை ஒன்று கட்டப்பட்டுவருகிறது. அம்மாவின் ஆட்சி காலத்திலே அது துவக்கப்பட்டது. அந்த பணி நிறைவு பெறுகின்ற சூழல் இருக்கின்றது.

அதுபோல கரூர் மாவட்டத்திலே அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தஞ்சை ஆற்றின் குறுக்கே 400 கோடி மதிப்பில் கதவணை பணியை அம்மாவின் அரசு துவக்கி நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மேட்டூர் அணையிலிருந்து பருவகாலங்களிலே பெய்கின்ற உபரி நீர் வெளியேறுகின்ற பொழுது, அந்த உபரி நீரை நீரேற்றி மூலமாக சுமார் 100 வறண்ட ஏரிகளுக்கு 565 கோடி ரூபாயில் இன்றைக்கு அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அம்மாவின் அரசு ஆணையிட்டு முதற்கட்ட பணி நடந்து நானே துவக்கி வைத்தேன். மீதி பணிகள் இப்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன.

டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

காலகாலமாக விவசாயிகள் அச்சப்பட்டு கொண்டிருந்தார்கள். தங்களுடைய விளை நிலங்கள் பறிபோய்விடுமே என்ற நிலையில் இருந்த விவசாயிகளுக்கு அந்த விவசாய சங்கங்கள் எங்களை சந்தித்து, அங்கு இருந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களை அணுகி அந்த டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு சட்டம் கொண்டு வந்து, நிறைவேற்றி விவசாயிகளைப் பாதுகாத்த அரசு அம்மாவின் அரசு. விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தடையில்லா மின்சாரத்தை அளித்த அரசு அம்மாவின் அரசு. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரம்
கிடைக்க வேண்டும் என்பதற்காக 1.4.2021 ல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவின் அரசு.

அதுபோல அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 7 கோட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன. 27 வட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன.இவை அனைத்தும் அம்மாவின் அரசு செய்த சாதனைகள்.

பொதுமக்களின் கோரிக்கை உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்
என்பதற்காக சட்டப்பேரவையிலே நான் முதலமைச்சராக இருந்த காலத்திலே முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் என்ற அடிப்படையிலே அதனை அறிவித்து, நானே முதல் முதலாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியிலே நங்கவல்லி ஒன்றியத்தில் துவக்கி வைத்தேன்.

அதுபோல தமிழகம் முழுவதும் இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆட்சிகள் அனைவரும் மக்களை சந்தித்து கோரிக்கையை பெற்று, அதற்குத்தீர்வு கண்ட அரசு அம்மாவின் அரசு. இந்த திட்டத்தின் மூலமாக சுமார் 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டன. அதிலே சுமார் 5 லட்சத்து 8 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்ற விபரத்தை
சம்பந்தப்பட்டவர்களுக்கு பதில் அனுப்பட்டது. 7,52,547 இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

பல திட்டங்களை தி.மு.க. அரசு கைவிட்டு விட்டது

பட்டா மாறுதலை 33 லட்சம் பேருக்கு அளித்துள்ளோம். 24 மணி நேரமும் தங்களுடைய குறைகளைத் தெரிவிக்கின்ற வகையில் 1100 என்ற முதலமைச்சர் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டது. தாலிக்கு தங்கம் திட்டம் அற்புதமான திட்டம்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண்கள் உயர்கல்வி பெறவேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், அம்மா அவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு அந்த பெண்களுக்குத் திருமணம் நடக்கும்போது 25 ஆயிரம், 50ஆயிரம் தாலிக்கு 8 சவரன் தங்கம் என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினோம். அதன் மூலமாக 12 லட்சத்து 51 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

12 லட்சத்து 51 ஆயிரம் குடும்பங்களுக்கு விளக்கு ஏற்றிய அரசு அம்மாவின் அரசு. அம்மா இருசக்கர வாகனம் திட்டம். அம்மா அறிவித்தார். அம்மாவின் மறைவுக்குப் பிறகு அம்மாவின் அரசு அதனை நிறைவேற்றியது. அவர்களுக்கு 25 ஆயிரம் மானியம் அளித்தோம். அதில் சுமார் 2 லட்சத்து 82 ஆயிரம் மகளிருக்கு வாகனம் வழங்கப்பட்டது. அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு, அம்மா குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தோம். பல திட்டத்தை இந்த அரசு கைவிட்டு விட்டது.

கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்தோம்

2015ம் ஆண்டு அம்மா தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். தொழிலை ஈர்த்த அரசு அம்மாவின் அரசு. 2019ம் ஆண்டு அம்மாவின் அரசும் சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி சுமார் 3 லட்சத்து 500 கோடி ரூபாய் தொழில் முதலீட்டை ஈர்த்தோம். அதில் 304 தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டோம். கிட்டதட்ட 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அம்மாவின் அரசு நடவடிக்கை எடுத்தது.

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு பிறகு 2019ல் 79 புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாங்கள் போட்டோம். அதிலே 52 ஆயிரத்து 69 கோடி தொழில் முதலீட்டை நாங்கள் ஈர்த்து சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளோம்.

வெளிநாட்டு பயணத்தின்போது 41 புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டோம். கிட்டதட்ட 8 ஆயிரத்து 835 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்தோம். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் இருக்கின்ற வெளிநாடு தமிழர்களுக்கு புதியதாக தொழில் துவங்கவேண்டும் என்பதற்காக யாதும் ஊரே என்ற திட்டத்தை அறிவித்த அரசு அம்மாவின் அரசு தான். கொரோனா காலத்திலும் அதிக தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு.

நீட்தேர்வு விவகாரத்தில் தி.மு.க. பச்சைபொய்

நீட் தேர்வு குறித்து இன்றைக்கு இருக்கின்ற முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதியும் குறிப்பிட்டார். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். பச்சைப்பொய். இதுவரையில் செய்ய முடியவில்லை. நாங்கள் ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றியதை தான் இவர்களும் நிறைவேற்றியுள்ளார்கள்.

ஆனால் இந்த நீட் தேர்வு வருவதற்கு யார் காரணம். 2010 ல் தி.மு.க.வும், காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆட்சியிலிருந்த போது தான் இந்த நீட் தேர்வு வந்தது. 2010 டிசம்பர் 21ம் தேதி மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நீட் தேர்வை இந்தியா முழுவதும் கொண்டு வருவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது.

அப்போது மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த காந்திசெல்வன் இருந்தார். நீட் தேர்வை
கொண்டு வந்ததும் இவர்கள் தான். இதனை எதிர்ப்பவர்களும் இவர்கள் தான். எப்பேர்பட்ட நாடகத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதனை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் வருகின்ற போது இதற்குத் தக்க தீர்ப்பை வழங்குவார்கள். இன்றைக்கு உயர்கல்வியில் முதல் மாநிலம் தமிழகம். 2030ல் அடைய வேண்டிய இலக்கை, 2019-20 ல் அடைந்திருக்கிறோம். சுமார் 51 சதவீதம் உயர்கல்வி படிக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளோம்.

சென்னை மாநகரின் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கு கண்ணன் கோட்டை, தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தை 400 கோடியில் நிறைவேற்றியது அம்மாவின் அரசு தான். கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை நெமிலியில் சுமார் 1689 கோடியில் நிறைவேற்றியது அம்மாவின் அரசு தான்.

கொடுங்கையூரில் 348 கோடியில் 486 கோடியில் கோயம்பேட்டில் எதிர்மறை சவ்வூடு பரவுதல் நிலையில் மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்ததும் அம்மாவின் அரசு தான். தமிழகத்தில் 33 கூட்டுக்குடிநீர் திட்டத்தை சுமார் 3 ஆயிரத்து 150 கோடியில் இன்றைக்கு நடைபெறுதற்குத் திட்டமிட்டு செயல்படுத்தியது அம்மாவின் அரசு. 9 ஆயிரத்து 600 கோடியில் 454 திட்டங்களை ஸ்மாட் சிட்டி திட்டத்தில் நடைபெறுவதற்கு காரணமாக இருந்தது அம்மாவின் அரசு.

வெள்ள பாதிப்பை தடுக்க அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் சுமார் 1357 கோடி ரூபாய் மழை நீர் வடிகால் கட்டமைப்பை உருவாக்கிய அரசு அம்மாவின் அரசு. ஏழை எளிய மக்கள் இருக்கின்ற இடத்திலே அம்மா மினி கிளினிக்கை கொண்டு வந்தது அம்மா அரசு. இதனைக் கூட இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
ஏழைகளுக்கு வைத்தியம் செய்வதை கூட பொறுத்துக்கொள்ள முடியாத அரசு தி.மு.க அரசு.

ஒரே நேரத்தில் 200 அம்மா மினி கிளினிக்கை திறந்தது அம்மாவின் அரசு. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தினோம். வரலாற்று சாதனையை அம்மாவின் அரசு படைத்தது. ஒரே ஆண்டிலே இந்தியாவில் எந்த மாநிலமும் சாதிக்க முடியாத வரலாற்று சாதனையை படைத்தோம். 11 அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தோம்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா

அம்மா அவர்கள் இருக்கும் போது 6 அரசு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்தார். 10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் 17 அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்து சாதனை படைத்த அரசு அம்மாவின் அரசு. அம்மா அவர்கள் இருக்கும் போது புதிய சட்டக்கல்லூரியை கொண்டு வந்தார்.

அம்மா மறைவுக்குப்பிறகு நான் முதலமைச்சராக இருந்தபோது 7 சட்டக்கல்லூரியை கொண்டு வந்தோம். அம்மாவுடைய அரசு 21 பல்வகை கல்லூரியை அளித்துள்ளது. 4 பொறியியல் கல்லூரியை அம்மா இருந்த காலத்திலும், நான் இருந்த காலத்திலும் கொண்டு வந்துள்ளோம். மூன்று கால்நடை ஆராய்ச்சி கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். இன்றைக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா தலைவாசலில் அமைத்துத் தந்தது நாங்கள் தான்.

புதியதாக 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அளித்தது அம்மாவின் அரசு. புதியதாக 247 தொடக்க பள்ளியை
அளித்துள்ளோம். 117 தொடக்கப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக உயர்த்தியுள்ளோம். 1079 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக உயர்த்தியுள்ளோம். 604 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தியுள்ளோம்.

உயர்கல்வி பயில அடித்தளமாக அமைத்துத் தந்தது அம்மாவின் அரசு. கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்த அரசு அம்மாவின் அரசு. ஏழை, எளிய மாணவர்கள் இன்றைக்கு உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் ஏற்படுத்தி தந்துள்ளோம்.

அம்மா அரசில் தடையில்லா மின்சாரம்

32,140 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தடையில்லா மின்சாரத்தை அம்மாவின் அரசு அளித்தது. 1440 கோடியில் மீன்பிடி துறைமுகங்களை அமைத்து தந்துள்ளோம். 520 கோடியில் 43 இடங்களில் மீன் இறங்குதளம் அமைத்து தந்துள்ளோம். சென்னையில் குற்றங்களை குறைப்பதற்கு 2.50 லட்சம் செலவில் சிசிடிவி கேமரா அமைத்து தந்தது அம்மாவின் அரசு.

கட்டுமான பொருட்களின் விலை ஏறாமல், மக்கள் சிரமப்படாமல் மக்களை பார்த்துக் கொண்ட அரசு அம்மாவின் அரசு, மெட்ரோ ரயில் கட்டம் இரண்டு சுமார் 64 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மத்திய உள்துறை அமைச்சரே நேடியாக அழைத்து வந்து அடிக்கல் நாட்டி இன்றைக்கு சென்னை மாநகர் மக்களின் கனவே நனவாக்கிய அரசு அம்மாவின் அரசு.

அதிகமான சாலைகளை விரிவாக்கம் செய்தோம். தரமான சாலைகளை அளித்தோம். அதிகமான தார் சாலைகள் உள்ள மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி காட்டினோம். அதிகமான பாலங்களை கட்டி கொடுத்தது அம்மாவின் அரசு. அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தது போல 7-வது ஊதிய குழு பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும், சம்பளத்தை உயர்த்தி கொடுத்த அரசு அம்மாவின் அரசு. எந்த பிடித்ததும் இல்லாமல் படியை உயர்த்தி அளித்தோம்.

அம்மாவின் அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தியது

நீட்தேர்வு வந்த காரணத்தினால் அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினாலே, அவர்களுக்கு மருத்துவக்கல்வி எட்டாக்கனியாக இருந்தது. அதனை போக்க அம்மாவின் அரசு அரசு பள்ளியில் படிக்கின்ற 41 சதவீத மாணவர்களுக்கு 7.5 உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம். 4 ஆண்டுகள் முன்பு 9 சதவீத பேர் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவர்கள் ஆனார்கள்.

சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் பேரில் 9 பேருக்கு தான் இடம் கிடைத்தது. நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்ற காரணத்தினாலே, கிராமத்திலிருந்து வந்த காரணத்தினாலே, அந்த ஏழை மாணவர்களின் மருத்துக்கனவு நனவாக வேண்டும் என்ற காரணத்திற்காக அம்மாவின் அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்து அமல்படுத்தி, அதனால் இன்றைய தினம் 505 பேர் மருத்துவராக சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதுபோல அவினாசி, அத்திக்கடவு திட்டத்தை ரூ.1650 கோடியில் அம்மா அரசு தான் செயல்படுத்தியது. முக்கொம்பில் அணை பழுதடைந்துள்ளது. இந்த அணையை கட்டுவதற்கும் அம்மா அரசு சுமார் ரூ. 400 கோடி ஒதுக்கி அதுவும் நிறைவேற்றப்படுகின்ற நிலையில் உள்ளது. இப்படி பல்வேறு பெரிய திட்டங்களை எல்லாம் நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு. சாதனை மேல் சாதனை படைத்த அரசு அம்மாவின் அரசு.

இன்றைய தினம் ( நேற்று) ஓராண்டை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை தான் மிச்சம். இன்றைக்கு முதல்வர் சாதனை பட்டியலை வெளியிட்டிருக்கிறார். ஆனால் மக்கள் வேதனை பட்டியலை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேரவையில் முதல்வர் ஒரு நீண்ட உரையை ஆற்றியுள்ளார். அதில் சாதனையை சொல்லியுள்ளார். அது சாதனை அல்ல. மக்கள் வேதனை தான் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பொங்கல் தொகுப்பு தி.மு.க. அரசின் மிகப்பெரிய சாதனை

இன்றைக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஒட்டு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. அம்மா அரசு கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் இன்றைக்கு முடக்கிக்கொண்டிருக்கிறார்கள். பெயரை மாற்றி வருகிறார்கள். அம்மா மினி கிளினிக்கை மூடி விட்டார்கள். அம்மா சிமெண்ட் பெயரை வலிமை சிமெண்ட் என்று மாற்றி விட்டார்கள். பொங்கல் தொகுப்பு கொடுத்தது தான் இந்த அரசின் மிகப்பெரிய சாதனை.

திமுக ஆட்சி வந்தவுடன் 21 பொருட்களுடன் பொங்கல் தொகுப்பை கொடுக்கிறார்களே என்று ஒரு பெண் நியாய விலை கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய பின்னர் தான் தெரிந்தது. ஆகா இப்படிப்பட்ட பொருட்களை தந்துள்ளார்களே என்று ஆச்சரியப்பட்டு போனார்கள். அதில் கொடுக்கப்பட்ட வெல்லம் போல் எங்கும் தயார் செய்தது கிடையாது. அந்த பெண்மணி அந்த வெல்லத்தை தூக்கி கொண்டு செல்லும் போது ஒழுகிக்கொண்டே போகிறது. அப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பை அளித்தார்கள். நாங்கள் கேட்டால் எங்கும் முறைகேடு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

திருவண்ணாமலையில் நேரடியாக குடோனுக்கு சென்று அங்கு ஆய்வு செய்த போது சுமார் 2 டன் வெல்லத்தை தடை செய்தார். இது உண்பதற்கு உகந்தது அல்ல என்று தடை செய்தார். பொங்கல் தொகுப்பைப் பிரித்துப்பார்த்தால் மிளகுக்கு பதிலாகப் பப்பாளி விதையும்,இலவம்பஞ்சு விதையும்தான் இருந்தது.சில பாக்கெட்டில் காற்று மட்டும் தான் வந்தது. விஞ்ஞான முறைப்படி பொங்கல் தொகுப்பு கொடுத்த ஒரே அரசு தி.மு.க அரசு. வரலாற்றில் யாரும் மறக்க முடியாத பொங்கல் தொகுப்பை அளித்த அரசு திமுக அரசு.இதுதான் அவர்களின் சாதனை.மகளிர் நகரப் பேருந்தில் இலவச பயணம் என்று சொன்னார்கள்.

ஆனால் சென்னையில் 100க்கு 33 சதவீத வெள்ளை நிற பேருந்தில் மட்டும்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடிகிறது. மற்ற பேருந்தில் டிக்கெட் வாங்கி தான் பயணம் செய்ய முடியும். எனவே அறிவிப்பு ஒன்று, செய்வது ஒன்று. மதுரையிலும் இதுபோன்று உள்ளது என்று எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி கேட்டபோது நாங்கள் சொன்னது உண்மை தான். ஆனால் பேருந்துகளை நடத்த முடியவில்லை, போக்குவரத்துறை 48 ஆயிரம் நஷ்டம் உள்ளது என்று அமைச்சர் தெரிவிக்கிறார். இவை அனைத்தும் தெரிந்து தானே அறிவிப்பு செய்கிறீர்கள்.

அ.தி.மு.க. அரசின் திட்டங்களை தான் முதலமைச்சர் திறக்கிறார்

தேர்தல் நேரத்தில் ஒரு அறிவிப்பு. தேர்தல் முடிந்த பின்னர் ஒரு அறிவிப்பு. கல்விக்கடன் ரத்து என்று சொன்னார்கள். இதுவரை வாயே திறக்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மாதம் தோறும் 100 ரூபாய் மானியம் தருவதாக சொன்னார்கள். இதுவரை தரவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்றார்கள். அதனையும் இன்றும் உயர்த்தவில்லை. அவர்களுக்கு ஊதிய உயர்வு என்றார்கள்.

இதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றார்கள். இதுவும் உயர்த்தப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்தார்கள். டீசலுக்கு குறைக்கவில்லை. மத்திய அரசு மீது பழி போட்டார்கள். முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சொன்னார்.

மத்திய அரசு குறைத்தது. இதனை ஒட்டி இந்தியாவில் இருக்கின்ற 25 மாநில முதலமைச்சர்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று., பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார்கள். ஆனால் நம் மாநில முதல்வர் குறைக்கவில்லை. அவர் அறிவித்தவாறு தேர்தல் வாக்குறுதிப்படி எதுவும் குறைக்கவில்லை. ஒன்று இரண்டு மட்டும் நிறைவேற்றி விட்டு, நாங்கள் 60 சதவீதம் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என்ற பொய்யான செய்தியை பரப்பி கொண்டு வருகிறார்.

அது உண்மையில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் நிறைய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிறது என்ன பெரிய திட்டத்தை நீங்கள் அறிவித்துள்ளீர்கள். எதையாவது நிறைவேற்றினார்களா. ஒரு திட்டத்தையாவது நிறைவேற்றினார்களா. கிடையவே கிடையாது. அ.தி.மு.க அறிவித்த திட்டங்களின் முடிவுற்ற பணியைத் தான் இப்போது இருக்கின்ற முதல்வர் திறந்து வைத்து வருகிறார்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதிலும் வருமாறு

கேள்வி: போதுமான நிதி இல்லை. மத்திய அரசு இன்றும் நிதியை அளிக்கவில்லை என்று தெரிவிக்கின்றார்களே

பதில்: எங்களிடம் மட்டும் நிதி இருந்ததா. அவர்கள் நிறைய வைத்துவிட்டு சென்றார்களா.1 லட்சத்து 16 கோடி வைத்து விட்டு தானே சென்றார்கள். அன்றைக்கு பணத்தின் மதிப்பு என்ன. இன்றைக்கு பணத்தின் மதிப்பு என்ன.

நீங்களே ஒப்பிட்டுப் பாருங்கள். 2006 லிருந்து 2011 வரை கடுமையான மின்வெட்டு. பின்னர் அம்மா 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில் நான் முதல்வராக வந்தவுடன் மூன்றே ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை தருவேன் என்றார். மூன்றே ஆண்டுகாலத்தில் தடையில்லா மின்சாரத்தை அளித்தார். தொடர்ந்து 10 ஆண்டுக்காலம் தடையில்லா மின்சாரத்தை அளித்தோம். பம்பு செட்டுகளுக்கு மின்சாரத்தை அளித்தோம்.

மும்முனை மின்சாரத்தை அளித்தோம். தொழிற்சாலைக்கு நாங்கள் தடையில்லா மின்சாரத்தை வழங்கினோம். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கடுமையான மின்வெட்டு நிலவுகிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய பம்புசெட்டுகளை இயக்க முடியவில்லை. தொழிற்சாலைகளை முழுமையாக இயக்க முடியவில்லை. இவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பொருளாதாரம் சீர்குலைக்கின்ற நிலை உள்ளது. விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. கட்டுமான பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

கேள்வி: முதல்வர் 5 திட்டங்களை அறிவித்துள்ளார், இதில் மாணவர்களுக்குச் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: யானைக்கு சோள பொறி போடுவது போலத்தான் இது. எதையாவது அறிவிக்க வேண்டும். அதற்காக இதனை அறிவித்துள்ளார். ஓராண்டு நிறைவு விழாவை இன்றைக்கு கொண்டாடுகிறார்கள். அதற்காக சில திட்டத்தை அறிவித்துள்ளார் .708 இடத்தில் நகர்ப்புற மருத்துவ விடுதி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே நாங்கள் அம்மா மினி கிளினிக் ஆரம்பித்தது தானே.

எங்களை பார்த்து தான் பின்பற்றுகிறார்களே ஒழிய அவர்கள் சுயமாக எந்த திட்டத்தை அறிவிக்கவில்லை. அதுபோல மருத்துவக்கல்லூரிக்கும், பல் மருத்துவகல்லூரிக்கும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதனை பின்பற்றித்தான் பொறியியல் கல்லூரி ,வேளாண்மை கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி, சட்டககல்லூகளில் கொண்டு வந்துள்ளார்கள். அதிமுக அரசு எந்தெந்த திட்டத்தை கொண்டு வந்ததோ, அதனை பின்பற்றித்தான் இந்த அரசு செயல்படுத்துகிறது

கேள்வி: பேருந்தில் பயணம் செய்த முதல்வரிடம் பெண்கள் வெள்ளை நிற பேருந்து 1 மணி நேரத்திற்கு ஒன்று தான் வருகிறது என்று ஆதங்கப்பட்டுள்ளார்களே.

பதில்: தமிழகத்திலுள்ள அனைத்து நகர பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். இப்படிதான் சட்டமன்ற தேர்தலில் அறிவித்தார்கள். ஆனால் சென்னையில் 100க்கு 33 சதவீத வெள்ளை நிற பேருந்துகள் செல்கிறது. இதில் மட்டும் தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும்.

கேள்வி: மகளிருக்கு இலவச பயணம் அறிவித்துவிட்டு. பேருந்து கட்டணத்தை உயர்த்த குழு அமைக்கப்பட்டுள்ளதே

பதில்: இது குறித்து முழுமையாகத் தகவல் கிடைக்கவில்லை. சொத்து வரியை உயர்த்தியுள்ளார்கள். முதல் பிள்ளையார் சுழியை போட்டுள்ளார்கள். மின் கட்டணம்,குடிநீர் கட்டணம், பேருந்து,பால் விலையை உயர்த்தப்போகிறார்கள்.

கேள்வி: குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் தருவதாகச் சொன்னார்களே. இன்னும் தரவில்லையே.

பதில்: 4 ஆண்டுகளும் தர மாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும், அடுத்த ஆண்டு தருகிறோம். அடுத்த ஆண்டு தருகிறோம் என்று சொல்வார்கள். நான்கு ஆண்டுகள் இதே வார்த்தை தான் வரும். மக்களை ஏமாற்றி மக்களிடம் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு மக்களை மறந்து விடுவார்கள். இதுதான் தி.மு.க ஆட்சியின் மாதிரி. இது தான் திராவிட மாடல்.

கேள்வி: சென்னை மேயர் அம்மா உணவகத்திற்கு வரவேற்பு இல்லை என்று தெரிவித்துள்ளாரே…

பதில்: இது குறித்து எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.அப்போது ஆளும் தரப்பிலிருந்து அம்மா உணவகத்தை மூடமாட்டோம் என்று சொன்னார்கள். இதனை முறையாக செயல்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள். அம்மா உணவகத்தை யார் முடக்கினாலும் அதற்கு மக்கள் தகுந்த பரிசை அளிப்பார்கள்.

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி அளித்தார்.