மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது தி.மு.க அரசு – பட்டின பிரவேசத்திற்கு தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி

சென்னை,
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதித்த தடையை நீக்கி கோட்டாட்சியர் அனுமதி அளித்துள்ளார். மக்களின் கடும் எதிர்ப்புக்கு தி.மு.க. அரசு பணிந்து விட்டது. இது கழகத்தின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும்.
நெடுங்காலமாக நடைபெற்று வரும் சமய சடங்குகளில் ஒரு மத சார்பற்ற அரசு தலையிடக்கூடாது என்று கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கடந்த 4-ந்தேதி அன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து இருக்கும் அரசின் இந்த முடிவை கைவிட வேண்டும், கோயில் மற்றும் சமய சடங்குகளில் அரசு மட்டுமல்ல.
யாரும் தலையிடக்கூடாது. அது இந்து மதத்தின் நம்பிக்கையாகும். இந்து மதம் மட்டுமல்ல எந்த மதத்தின் நம்பிக்கையிலும் தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
மேலும் ஆங்கிலேயர் ஆட்சி புரியும் போது கூட இந்த பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதில்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. ஆனால் தருமபுரம் ஆதீனத்தின் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்துள்ளது அப்பகுதி மக்களிடையே
வருத்தத்தையும், வேதனையையும், அரசின் மீது கடுமையான எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு பிரிவு 25, 26-ன் படி, வழங்கியுள்ள மத சுதந்திர உரிமை அடிப்படையில் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செய்வதற்கு தடை விதிக்க முடியாது என்பதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
எனவே பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற வேண்டுமென்று பக்தர்களும், அப்பகுதி மக்களும் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். எனவே ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சிக்கு இந்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று பேசினார்.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்து மதத்தின் மீது தி.மு.க தேவையற்ற தாக்குதல்களையும், தலையீடுகளையும் செய்வதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து தி.மு.க அரசு தன் முடிவை திரும்ப பெற்று, எந்த கோட்டாட்சியர் பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதித்தாரே அவரே இப்போது தடையை விலக்கி பட்டின பிரவேசம் நடப்பதற்கு அனுமதி அளித்திருக்கிறார். இதன் மூலம் கடந்த இரு வாரங்களாக தமிழகமெங்கும்
ஏற்பட்டு வந்த மக்களின் கோபம் தணிந்திருக்கிறது.