தமிழகம்

லாக்-அப் மரணங்கள், காவல்துறையினரின் அத்து மீறல்கள்

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

சென்னை

லாக்-அப் மரணங்கள், காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து சட்டப்பேரவையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விக்னேஷ்-ன் மர்ம மரணம் பற்றி இச்சபையில் எழுப்பினேன். சி.பி.ஐ விசாரணைக்கும் மீண்டும் வலியுறுத்துகிறேன். முதல்வர் இதனை கொலை வழக்காக மாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மாநில காவல்துறையினரே இதனை விசாரித்தால் எப்படி நேர்மையாக விசாரணை நடைபெறும். நடுநிலையோடு நியாயம் கிடைக்க இந்த வழக்கு சிபிஜக்கு மாற்ற வேண்டும்.

திருத்தணியில் பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட புளியில், பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த நந்தன் என்பவர் மீது ஜாமீனில் வர இயலாத வழக்கை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த அவரது மகன் பாபு என்கிற குப்புசாமி அவமானம், வேதனை காரணமாக இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். யார் தூண்டுதலில் காவல்துறையினர், ஜாமீனில் வெளிவராத வழக்கை பதிவு செய்தனர் என்று முதலமைச்சர் விளக்க
வேண்டும். கருத்தை வெளியிட்டவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயமாகும்.

சென்னையில் முகக்கவசம் அணியாத சட்டக்கல்லூரி மாணவர் மீது அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவலர்கள், அந்த மாணவரை (அப்துல் ரஹிம்) காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் எல்லை மீறல் தான் காவல்நிலைய இறப்புகளாக மாறிவிடும் சூழ்நிலையை உருவாக்குகின்றன

சென்னை பூந்தமல்லி போக்குவரத்து காவல்பிரிவு எஸ்.ஐ (ராஜன்) லாரி டிரைவரிடம் லஞ்சம் கேட்டும், மிரட்டல் விடும் வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது (26.12.2022). இது போல் பல சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.