தற்போதைய செய்திகள்

காவேரி டெல்டா விவசாயிகளுக்கு மு.க.ஸ்டாலின் பச்சை துரோகம் – முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி குற்றச்சாட்டு

திருச்சி

காவேரி டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பச்சை துரோகம் செய்துவருகிறார் என கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி குற்றம்சாட்டினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளையொட்டியும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களை விளக்கியும் திருச்சி மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் எடமலைப்பட்டிபுதூர் ஸ்ரீகாளிம்மன்கோவில் அருகில் மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்றபோது, இந்த ஆட்சி ஒரு மாதத்தில் கலைந்துவிடும், மூன்று மாதத்தில் கலைந்துவிடும், ஆறு மாதத்தில் கலைந்துவிடும் என்று ஆருடம் சொன்னவர்களின் முகத்தில் கரியை பூசும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கழக ஆட்சி மூன்றாண்டுகளை கடந்து 4-வது ஆண்டில் வெற்றிகரமாக பல சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமாக்கி இருக்கிறார் மக்களின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

இந்த சட்ட மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் சட்டமன்றத்தில் நடைபெற்ற இச்சட்டமசோதா குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு தனது கருத்துக்களை சொல்லி இருக்கவேண்டும்.

ஆனால், மனசாட்சியே இல்லாமல் சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்து காவேரி, கச்சத்தீவு, முல்லைப்பெரியார் போன்ற எண்ணற்ற தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகளுக்கு காரணமான தனது தந்தை கருணாநிதியைப்போல ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை கொண்டுவந்து காவேரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்த மு.க.ஸ்டாலினும் தொடர்ந்து விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார்.

தான் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக கழக அரசு மீதும், நமது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீதும் பல்வேறு அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும் செய்து வரும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்காகவும், தமிழக மக்களுக்காகவும், விவசாயிகளின் நலன் காக்கவும் ஏதாவது ஒரு உருப்படியான நல்ல திட்டத்தை செயல்படுத்தியது உண்டா? என்றால் இல்லை. இதையெல்லாம் தமிழக மக்கள் எண்ணிப்பார்த்து விரைவில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றிபெற நீங்களெல்லாம் உறுதுணையாக இருக்கவேண்டும் என் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி பேசினார்.

முன்னதாக திருச்சி மாநகர் மாவட்டக் கழக அவைத்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், கழக மீனவர் பிரிவு இணைச்செயலாளர் வெண்பாவூர் தேவராஜன் ஆகியோர் பேசினர்.