தற்போதைய செய்திகள்

தென்முடியனூர் கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி

திருவண்ணாமலை

தென்முடியனூர் கிராமத்தில் சமுதாயக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றிய கழகம் சார்பில் தென்முடியனூர் கிராமத்தில் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவருமான ராஜா என்கிற தேவராஜன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பாண்டியன், ஒன்றிய கழக அவைத்தலைவர் கணேசன், ஒன்றிய துணை செயலாளர் புவனேஸ்வரி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக துணை செயலாளர் நல்லதம்பி, ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்முடியனூர் கிராமத்தில் 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயில் கடந்த 40 ஆண்டு காலமாக புனரமைப்பு செய்யாமலும், கும்பாபிஷேகம் நடைபெறாமலும் உள்ளது என கோரிக்கை வைத்துள்ளீர்கள்.

எனது முயற்சியின் காரணமாக அறநிலையத்துறை சார்பில் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இக்கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று சீனிவாச பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சமுதாயக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கோயிலில் நிதிஇல்லை என்றாலும் வேறு கோயிலில் உபரியாக உள்ள நிதியினை பெற்று இப்பகுதியில் திருமண மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.