தற்போதைய செய்திகள்

10 ஆண்டு கால எங்கள் ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, ரவுடியிசம் இல்லை

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேச்சு

சென்னை

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

கழக நிறுவனர் டாக்டர், பொன்மனச்செம்மல். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை வணங்கி, இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களை வணங்கி, இருபெரும் தலைவர்களுக்கு பிறகும், அம்மாவின் தொண்டர்களாகிய நாங்கள், அவர்கள் வகுத்து தந்த பாதையில் செயல்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ செய்து, அதற்காக மத்திய அரசிடமிருந்தும், இந்தியா டுடே போன்ற தலைசிறந்த பல அமைப்புகளிடமிருந்து பரிசுகளை, விருதுகளை பெற்றோம்.

இருபெரும் தலைவர்களின் லட்சியமான தமிழகம் தொடர்ந்து அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும், அதற்காக ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழக மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற துடிப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தமிழகமெங்கும் உள்ள ஒன்றறை கோடி கழக தொண்டர்களுக்கும், எங்களுக்கு வாக்களித்த பொது மக்களுக்கும், எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி, வேளாண்மை துறை, தொழில்துறை, மருத்துவத்துறை, பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளாட்சித்துறை, கால்நடைத்துறை, ஆதிதிராவிடர் நலன், பிற்பட்டோர் நலன், சிறுபான்மையினர் நலன் உட்பட அனைத்தத் துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்தது தமிழ்நாடு.

இவை அனைத்துக்கும் முக்கியமான அடித்தளம் இந்தியாவிலேயே அமைதியான, பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்பது தான். அதற்கு முழுக்காரணம் எங்களது ஆட்சி காலத்தில் காவல்துறை சிறப்பாக, சுதந்திரமாக, செயல்பட்டது.

எனவே தான் எங்கள் ஆட்சியில் தமிழகம் இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிக்கும் முதன்மை மாநிலமாகவும், பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலமாக திகழ்ந்தது. தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த முதல் நகரமாக கோவையும், முதல் மெட்ரோ நகரமாக சென்னையும் விளங்கின.

எங்களுடைய ஆட்சியில் குற்ற வழக்குகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. அதில் பெரும்பான்மையான வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை பெற்று தரப்பட்டது.

கொரோனா நோய்தொற்றின் போது, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்காத காலத்திலும், மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட தன்னலமற்ற பணிகளால் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

கொரோனா பரவாமல் தடுப்பதற்கு அரசால் விதிக்கப்பட்ட லாக்டவுன் உட்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் சிறந்த முறையில் காவல்துறையினர் செயல்படுத்தினர். இதனால் பொதுமக்களின் ஆதரவுடன் கொரோனா நோய் தொற்று
கட்டுப்படுத்தப்பட்டது.

அதுபோலவே மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் சம்பந்தப்பட்ட துறைகளுடன், காவல்துறையும், தீயணைப்பு துறையும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டனர் என்பதை
இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக கையாளப்பட்டதால், சீன அதிபரும், (ஜின் பிங்) பாரதப் பிரதமரும் சந்திக்கும் நிகழ்வு சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நடந்தது. அனைவருக்கும் தெரியும்.

சீன அதிபர் மற்றும் அவரது குழுவினர் சென்னையில், ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்தனர். இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், இருநாட்டு தலைவர்களும் சுற்றுலா தலமான மகாபலிபுரத்தில் இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

சீன அதிபர் தினமும் சென்னையிலிருந்து மாமல்லபுரம் சென்று வந்தார். சீன அதிபர் மற்றும் பாரத பிரதமர் தங்கியிருந்த இடங்கள், செல்லும் வழி, பார்வையிடும் சுற்றுலா இடங்கள் மற்றும் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தும் இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் உயர்தர பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கள் அரசால் செய்யப்பட்டன.

இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சிகளில் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் இன்றி நடந்து முடிந்ததை பாரத பிரதமர் மற்றும் சீன அதிபர் எங்களை வெகுவாக பாராட்டி நன்றியும் தெரிவித்தார்கள்.

இதேபோன்று, காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற அருள்மிகு அத்திவரதர் வைபவத்தின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி அருள்மிகு அத்திவரதரை தரிசிக்க, தொடர்ந்து 48 நாட்கள் இரவு, பகல், வெயில், மழை என்று பாராமல், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவல் துறையினர் சிறப்பாக பணியாற்றினர்.

இதனால் எந்தவிதமான அசம்பாவிதமுமின்றி, சுமார் ஒரு கோடியே 7 லட்சம் பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர். அம்மாவின் அரசில், தமிழக காவல்துறை எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டது என்பதற்கு இதெல்லாம் எடுத்துக்காட்டுகள் என்பதை இங்கு பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழக மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமையும் போதெல்லாம் ஒரு நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். ஏனென்றால் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை தான்.

தமிழகத்தில் எங்களது 10 ஆண்டு கால ஆட்சியில் மத சண்டை இல்லை, சாதி மோதல் இல்லை, நில அபகரிப்பு இல்லை, கட்டப் பஞ்சாயத்து இல்லை, ரவுடியிசம் இல்லை, காவல்துறையில் ஆளும் கட்சியினரின் தலையீடு அறவே இல்லை காவல்துறையினர் சுதந்திரமாக முடிவு செய்தனர். வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் என்று யாருக்கும் எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை. நிம்மதியாக இருந்தார்கள்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.