தற்போதைய செய்திகள்

அ.தி.மு.க.வினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை

தமிழக சட்டப்பேரவையில்நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் மீது உண்மைக்கு மாறாக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. வீட்டு வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது தேவையற்ற செக்சனில் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

சமுதாயத்தில் பொதுவாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை அரசியல் கட்சியினரோ, அல்லது ஒரு அமைப்போ பதிவு செய்யும். இத்தகைய போராட்டங்களுக்கு அம்மாவின் அரசு எந்தவித தடையும் விதித்ததில்லை. போராடுபவர்கள் கைது செய்யப்பட்டு, பொது சொத்துக்கு சேதம் விளைவிக்காதவர்கள், சட்ட விரோத செயல்களில் ஈடுபடாதவர்கள் அன்று மாலையே விடுவிக்கப்பட்டார்கள்.

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர்கள் கூட சட்டவிதிகளுக்குட்பட்டு அன்றைய தினமோ அல்லது அடுத்த நாளிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இப்போது நீங்கள் பல்வேறு வழக்குகளை போட்டூள்ளீர்கள்.

2.5.2022 அன்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மாலை வீடு திரும்பும் முன் விளையாடும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக, மோதிக்கொள்வதாக ஒரு காணொளி, சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சண்டையை பார்க்கும் பெற்றோர்கள் மத்தியிலும், கல்வியாளர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மாணவ, மாணவியரை பற்றிய ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு நிகழ்வில் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையில் ஒரு மாணவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு திரைப்படப்பாடலை பாட, மற்ற மாணவர்கள் விசிறி மூலம் விசிற வைத்துக் கொண்டுள்ளனர். ராகிங் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியுள்ளனர்.

இதில் நடனம் ஆடாத மாணவர்களையும், காற்று வீசாத மாணவர்களையும் உடன் பயிலும் மாணவர்கள் அடிக்கின்றனர். ராகிங் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்களிடையே ஒரு அச்ச உணர்வை
உண்டாக்கியுள்ளது. ஏனெனில் கல்லூரிகளிலேயே பல கடுமையான சட்டங்கள் போடப்பட்டு, ராகிங் தடைசெய்யப்பட்டுள்ளது.

உடுமலைபேட்டை பேருந்து நிலையம் பகுதியில் கும்பலாக நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் ஆக்ரோஷமாக தாக்கிக் கொண்டனர். அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் பள்ளி மாணவர்கள் மீது காவல்துறையினரும், பள்ளிக்கல்வித்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.