சிறப்பு செய்திகள்

பேரவை நிகழ்ச்சிகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி

சென்னை

தமிழக சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார். சட்டசபை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென்று நாங்கள் ஏற்கனவே தெரிவித்தோம். அப்போது, அதற்குண்டான கட்டுமான வசதி செய்யப்படவில்லை.

அதெல்லாம் செய்யப்பட்டபின் ஒளிபரப்பு செய்யப்படும் என்று பேரவை தலைவர் கூறினார். இப்போது எல்லா வசதிகளும் செயல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டசபையில் நடைபெறுகிற நிகழ்ச்சி முழுவதும் ஒளிபரப்பப்படுவதில்லை. முதலமைச்சர், அமைச்சர்கள் பேசுவதை ஒளிபரப்புகிறார்கள் என்றார்.

இப்போது பேரவை தலைவர் அப்படி இல்லை. இந்தியா முழுவதும் எங்கெங்கு, எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்பதை பார்த்ததற்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். பின்னர் முதல்வர் சில விளக்கத்தை அளித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர்க்கட்சி வரிசையில் இருக்கிற தலைவர்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ, அதற்கு பதில் சொல்லுகிற போது இரண்டையும் ஒளிபரப்பினால் மக்களுக்கு முழுவதும் தெரியும். வேறு ஒன்றும் கிடையாது.

எங்களுடைய உரிமையைப் பற்றி பேசுவதற்கு இது ஒரு சந்தர்ப்பம். ஏன், இதையும் (விவாதத்தையும்) ஒளிபரப்பலாமே, இதில் என்ன தவறு இருக்கிறது? இதில் ஒன்றும் தவறு கிடையாதே. உங்கள் தேர்தல் அறிக்கையில், சட்டசபை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒளிபரப்பப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

அதைத்தான் நாங்கள் கேட்கிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை மட்டும் வெட்டி விடுகிறீர்கள். எதிர்க்கட்சி வரிசையில் பேசுகிற தலைவர்களின் பேச்சுக்களை நீங்கள் வெட்டி விடுகிறீர்கள் என்றார்.

அப்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி மேலாவது சட்டமன்றம் தொடங்குவதிலிருந்து முடியும் வரையில் அனைத்தையும் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு இந்த அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கின்ற எதிர்க்கட்சி தலைவர்கள் பேசுகின்ற பேச்சுகளும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

இதில் என்ன தவறு இருக்கிறது. நடாளுமன்றத்திலும் காட்டுகிறார்கள் இல்லையா. அந்த பக்கம் திருப்பிய கேமராவை எங்கள் பக்கம் திருப்பினால் தானாக ஒளிபரப்பாகி விடும். இது ஒன்றும் கடினமான காரியம் கிடையாது. ஏற்கனவே எல்லா அமைப்பையும் செய்து வைத்து விட்டீர்கள் என்று பேசினார்.