தற்போதைய செய்திகள்

முதல்வர், துணை முதல்வருக்கு வீரவாள் பரிசு – மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வீரவாள் பரிசு வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் மத்திய சுகாதாரம், குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமநாதபுரம் வருகை தந்தனர். அப்போது முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பூரண கும்பமரியாதை செலுத்தியும், மேளதாளங்கள் கொட்டியும் மலர் தூவி வரவேற்றனர்.

ராமநாதபுரம் பார்த்திபனூர் எல்லையிலிருந்து பட்டினம்காத்தான் பகுதி மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா இடம் வரை சாலையோரங்களில் ஆயிரக்கணக்கில் வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட கழகக் கொடிகள் கட்ட ஏற்பாடு செய்து சிறப்பான வரவேற்பை ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அளித்தார். இதேபோல் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் முதல்வர், துணை முதல்வருக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி வீரவாள் பரிசு வழங்கியும், மாவட்டத்திற்கு வருகை தந்து அடிக்கல் நாட்டி விழாவை சிறப்பித்ததற்கும் நன்றியும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள், மாணவ மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.