ஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு
சென்னை
ஆண்டுதோறும் சொத்து வரி, குடிநீர் வரியை உயர்த்தும் சட்டம் இப்போது தேவையற்றது என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்த) சட்ட முன்வடிவு குறித்து எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
இச்சட்ட திருத்தம் பகுதி 3ல் 81 பி பிரிவில் சொத்து வரியினை உயர்த்துதல் என்ற தலைப்பில் மன்றமானது தீர்மானத்தின் மூலம் அவ்வப்போது, அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வீதங்களுக்குள் சொத்து வரியினை அத்தகைய வீதத்தில் உயர்த்தலாம்-என்ற புதிய உட்பிரிவை புகுத்துகிறது.
ஏற்கனவே சொத்து வரி உயர்வு கடுமையாக அமல்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மீண்டும் ஆண்டுதோறும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரியினை உயர்த்த வழிவகை செய்யும் இச்சட்டம் இப்போது தேவையற்றது.
தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆண்டு தோறும் சொத்து வரி மற்றும் குடிநீர் வரி உயர்வினை நிர்ணயம் செய்வதற்கான அதிகாரத்தை மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி மன்றங்களுக்கு வழங்குவது என்பது மேலும், மேலும் தமிழக மக்களை பெரும்
சிரமத்திற்குள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் இச்சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.