சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை இடிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்

சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அரசையும், முதலமைச்சரையும், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், இளங்கோ தெருவில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் “குடிசை பகுதி” என அறிவிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நேற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஒரு வாரமாக குடிசை பகுதிகளை முழுமையாக இடிக்கின்ற பணிகளை நடைபெற்று கொண்டிருப்பதை 2008லிருந்து அந்த பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. பல்வேறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழியாக சுருக்கமாக அதன் நிலையை தெளிவுபடுத்த கடமைப்பட்டு இருக்கிறேன்.

இளங்கோ தெருவில் மொத்தம் 625 குடியிருப்புகள் உள்ளன. இதில் தெற்கு பக்கிங்காம் கால்வாய் கரையையொட்டி இளங்கோ தெருவின் மேற்கில் 326 குடியிருப்புகள் உள்ளன.

கரைக்கு எதிராக இளங்கோ தெருவின் கிழக்கில் 259 குடியிருப்புகள் உள்ளன. இதில் இளங்கோ தெருவின் மேற்கில் உள்ள 336 குடியிருப்புகள் பக்கிங்காம் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததால் அவை அகற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள 259 குடியிருப்புகள் இளங்கோ தெருவுக்கு கிழக்கே உள்ளன.

அதாவது பக்கிங்காம் கால்வாய், அதற்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்த கரையை ஆக்கிரமித்து கட்டியிருந்த 366 குடியிருப்புகள் அகற்றப்பட்டு விட்டது. அதற்கடுத்தாற் போல் 50 அடி அகலப்பாதை ரோடு தார் ரோடு போடப்பட்டு இருக்கிறது.

இந்த தார் ரோட்டுக்கு கிழக்கு பகுதியில் தான் இளங்கோ கோவிந்தசாமி நகர் என்ற பகுதி இருக்கிறது. அதில் தான் 259 வீடுகள் இருக்கிறது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இந்த மீதமுள்ள 259 குடியிருப்புகள் இளங்கோ தெருவுக்கு கிழக்கே உள்ளன. இந்த பகுதி குடிசை பகுதி என 1973ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப்பகுதி மேம்பாடு மற்றும் அடுக்குதல் சட்டம் 1971 ன்படி அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த பகுதிகளை டி நோட்டிபை செய்ய சட்டத்தில் வழிவகை இல்லை. இதனை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளரும், 9-3-2002 அன்று கடிதம் மூலமாக தெரிவித்து விட்டார். இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்பு அங்கு வாழ்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு சாதகமாக அமையவில்லை.

நான் முதலமைச்சரையும், தமிழக அரசையும் கேட்டுக்கொள்வது எல்லாம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்பு பணிகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் இளங்கோ தெருவின் கிழக்கே உள்ள 259 குடியிருப்புகள் குடிசை பகுதி என 1973-ம் ஆண்டே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்டு விட்டது என்பதையும்,

மேற்படி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு குடிசை பகுதி வாரியம் தான் என்பதையும், அவர்கள் அனைத்து விதமான வரிகளையும் அரசாங்கத்திற்கும் இன்று வரை செலுத்தி வருகிறார்கள் என்பதையும், அந்த குடியிருப்புகள் சாலையையோ அல்லது பக்கிங்காம் கால்வாயையோ ஆக்கிரமித்து கட்டப்படவில்லை என்பதையும் அரசின் சார்பாக மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு உடனடியாக தெரிவித்து ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து அங்கேயே குடியிருக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

அங்கு இந்த பிரச்சினை ஒருவாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதை எதிர்த்து 2008லிருந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையை முன் வைத்து 60 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட தன்னுடைய வீடு இடிக்கப்பட்டு விட்டதே என்பதனை அங்கு கண்ணையா என்ற வாலிபர் தீக்குளித்து இறந்திருக்கிறார். அது மிகவும் வருத்தப்படுகிற, அனைவரின் உள்ளங்களையும் உருக்குகின்ற செயலாக இருக்கிறது.

ஆகவே இறந்திருக்கின்ற கண்ணையா குடும்பத்திற்கு அரசின் சார்பாக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதையும் நான் இந்த நேரத்திலே அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து ஈர்த்தேன். முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு ஈர்த்து இருக்கிறேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.