சிறப்பு செய்திகள்

போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது இந்த விடியா தி.மு.க. அரசு – எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

சென்னை

சிலரை சில காலம், பலரை பல காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி நெசவுத்தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க வழிகாட்டாமல் போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது இந்த விடியா தி.மு.க. அரசு என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

சிலரை சில காலம் ஏமாற்றலாம்…
பலரை பல காலம் ஏமாற்றலாம்..
எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது..

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், நம் நாட்டுக்கு ஏற்றுமதி மூலம் பல நூறு கோடி ரூபாய் அன்னிய செலாவணியை ஈட்டுவதிலும் திருப்பூர் பின்னலாடை தொழில் முன்னணியில் இருந்தது.

ஆனால் இப்போது, நூல் விலை உயர்வினால் திருப்பூர் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து நெசவாளர்களும் வேலைவாய்ப்பின்றி ஸ்தம்பித்து போயுள்ளனர். மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

பஞ்சு இறக்குமதியில் உள்ள சிரமங்கள், இதனால் ஏற்பட்டுள்ள தாங்க முடியாத நூல் விலை உயர்வு, நெசவுத்தொழிலை நலிவடைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட நெசவாளர்களும், பின்னலாடை தொழிலாளர்களும் வீதிக்கு வந்து போராடுகிறார்கள்.

நெசவுத்தொழிலை நலிவில் இருந்து மீட்டெடுக்க வழிகாட்டாத இந்த விடியா அரசு, போகாத ஊருக்கு வழிகாட்டுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நம் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறையும் நிலை ஏற்படும் என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்.

எனவே, நூல் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மாநில அரசு போர்க்கால நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், நூல் விலை குறைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.