தமிழகம்

பதவிக்கு தகுதியில்லையென தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் வாக்குவாதம்

தென்காசி

ஒன்னே முக்கால் கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் விவகாரம் தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. பதவியில் இருக்க தலைவருக்கு தகுதியில்லை என்றும், உடனே பதவி விலக வேண்டும் என்று தி.முக. பெண் கவுன்சிலர் ஆவேசமாக பேசினார். அப்போது தலைவருக்கு ஆதரவாக எழுந்து பேசிய கவுன்சிலரையும் பெண் கவுன்சிலர் ஒருமையில் திட்டியதால் பரபரப்பு நிலவியது. இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டம் அதன் தலைவராக உள்ள தி.மு.க.வை சேர்ந்த தமிழ்செல்வி தலைமையிலும், காங்கிரசை சேர்ந்த துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) ருக்மணி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது

இந்த கூட்டம் தொடங்கியதுமே தி.மு.க.வை சேர்ந்த பெண் கவுன்சிலர் கனிமொழி எழுந்து மாவட்ட ஊராட்சி தலைவராக இருக்கும் தமிழ்செல்விக்கு தலைவர் பதவியில் இருக்கும் தகுதி இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று ஆவேசமாக பேச தொடங்கினார். இதனால் பரபரப்பு நிலவியது.

அதைத்தொடர்ந்து பேசிய தி.மு.க. கவுன்சிலர் கனிமொழி அவர் ஒரு கோடியே எழுபத்தி ஐந்து லட்சம் பணத்தை முறையாக செலவு செய்யாமல் கையாடல் செய்த தமிழ்செல்விக்கு தலைவருக்கான தகுதி இல்லை.

அதுமட்டுமின்றி அவரது கணவர் தி.மு.க மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி துணை செயலாளராக இருக்கும் போஸ், தி.முக தலைவர்களான கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரவி இருக்கிறது. எங்கு திரும்பினும் இந்த ஆடியோ விஷயம் தான் வைரலாகிறது. எனவே தகுதியற்ற நபரான தமிழ்ச்செல்வி தலைவராக இருக்கக்கூடாது. அவர் உடனே பதவி வலக வேண்டும் என்றார்.

அப்போது தலைவர் தமிழ்செல்விக்கு ஆதரவாக தி.மு.க.வை சேர்ந்த சாக்ரட்டீஸ் என்ற கவுன்சிலர் எழுந்து பேசினார். அப்போது அவரை தி.மு.க. பெண் கவுன்சிலர் கனிமொழி ஒருமையில் திட்டினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி ஒருமையில் பேசிக்கொண்டிருந்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

நிலவரம் கலவரமாக மாறி விடுமோ என்று தென்காசி காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் போலீசாருடன் வந்து கவுன்சிலர்கள், செய்தியாளர்கள் தவிர மற்றவர்களை வெளியேற்றி விட்டு வெளியில் காவலர்களை நிற்க வைத்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் பூட்டிய அறையில் கூட்டம் ஒரு வழியாக நடைபெற்றது.

இதற்கு முன்பு இந்த மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தமிழ்செல்வி போட்டியிட்டார். ஆனால் அவரை எதிர்த்து தி.மு.க. கவுன்சிலர் கனிமொழி நின்றார். இதில் தமிழ்செல்வி வெற்றிபெற்று தலைவராக பதவியில் உள்ளார். தமிழ்செல்வி தலைவராக பதவியேற்றவுடன் அவர் மத்திய அரசு வழங்கிய இரண்டே முக்கால் கோடி ரூபாய் நிதியில் ஒன்னே முக்கால் கோடியை எடுத்து தனது வார்டுக்கு பணிகள் செய்து விட்டதாகவும், ஆனால் அதை எடுப்பதற்கு மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் முறையாக ஒப்புதல் பெறவில்லை என்றும். இந்த கையாடல் சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. பெண் கவுன்சிலர் கனிமொழி ஏற்கனவே தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து உள்ளார்.

இந்நிலையில் இப்போது நடைபெற்ற மாவட்ட ஊராட்சியின் 3-வது கூட்டத்தில் அந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்து உள்ளது. மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தலைவருடன், தி.மு.க. பெண் கவுன்சிலர் மோதிக்கொண்டது இப்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவி வருகிறது.