அரசின் அலட்சியத்தால் அடைமதிப்பான்குளம் கல்குவாரியில் கோர விபத்து-கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம்

சென்னை
கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,
முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விடியா தி.மு.க அரசு தமிழ்நாட்டில் அமைந்ததில் இருந்து, தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் அளவே இல்லை. அந்த வேதனைகளின் ஓர் அங்கமாக திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத்தொகுதி, அடைமதிப்பான்குளம் கிராமத்தில் 14.5.2022 அன்று நடைபெற்ற கல்குவாரி விபத்தில் மூன்று அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர். ஒரு தொழிலாளி பாறைகளின் இடுக்கில் சிக்கி நரக வேதனை அனுபவிக்கிறார். பெரும் சேதாரம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தத் துயரமான விபத்துக்கு முழு காரணம் தி.மு.க ஆட்சியாளர்களின் ஊழல், முறைகேடு, கனிம வள சுரண்டல் தான் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. விபத்து நடைபெற்றிருக்கும் கல் குவாரியில், குவாரி செயல்படுவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதாலும், அரசின் குவாரி விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாத காரணத்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மேற்சொன்ன அடைமதிப்பான்குளம் கல் குவாரி செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
விடியா திமுக அரசு அமைந்தவுடன் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் தலைதூக்க ஆரம்பித்த லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் காரணமாக இந்த கல் குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டதால் இந்தத் துயர விபத்து நடைபெற்றிருக்கிறது. ஏழை, அப்பாவி குவாரி தொழிலாளர்களின் மரணத்திற்கு தி.மு.க அரசின் அலட்சியப்போக்கும், அதிகார துஷ்பிரயோகமுமே முழுமுதற் காரணங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
விபத்தில் உரிழந்த தொழிலாளர்கள் ஏழைகள், ஏதுமற்றவர்கள். அவர்களின் குடும்பங்களுக்கு அடுத்த வேளை உணவே கேள்விக்குறியாகி இருக்கிறது. எனவே, உடனடியாக அவர்களுக்கு தேவையான நிவாரண உதவித்தொகையை அரசு வழங்க வேண்டும். காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட கல் குவாரி மீண்டும் செயல்பட அனுமதி அளித்தது யார்? ஏன்? என்பது பற்றி உயர்நிலை விசாரணை நடைபெற வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் திமுக அரசு காட்டி வரும் அலட்சியப் போக்கால், மக்களுக்கு இதுபோன்ற துயரங்கள் மீண்டும் நடைபெறாதிருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அவற்றை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.