சிறப்பு செய்திகள்

சட்டம்-ஒழுங்கை சீரழித்திருக்கிறது தி.மு.க அரசு – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள், வியாபாரிகள், சிறு தொழில் புரிவோர், காவல்துறையினர், பாமர மக்கள் என அனைத்துத்தரப்பு மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வரிசையில், அரசுப் பேருந்தின் நடத்துனர், பயணியர் ஒருவரால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற செயல்கள் அன்றாடம் நடந்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து மதுராந்தகம் புறவழிச்சாலை நிறுத்தித்தில் நின்றபோது முருகன் என்ற பயணி பேருந்தில் ஏறியதாகவும், அவரை டிக்கெட் எடுக்க சொல்லி நடத்துனர் பெருமாள் கேட்டபோது,

மது போதையில் இருந்த அந்தப் பயணி நடத்துனரை ஒருமையில் திட்டி தாக்க முற்பட்டதாகவும், பயணிகள் தடுத்து நிறுத்தியும் நடத்துனரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாகவும், திடீரென்று யாரும் எதிர்பாராத நிலையில் மதுபோதையில் இருந்த பயணி நடத்துனரை தாக்கியதன் காரணமாக நடத்துனர் மயக்கமடைந்து கீழே விழுந்ததாகவும்,

நிலை குலைந்து கீழே விழுந்த நடத்துனரை உடனடியாக பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் அருகில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

இந்த செய்தி மிகுந்த மனவேதனையை எனக்கு அளித்துள்ளது. உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுமக்கள் இருக்கின்ற ஒரு பேருந்திலேயே இதுபோன்ற தாக்குதல் நடக்கிறது என்றால், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணவே அச்சமாக இருக்கிறது. அரசுப் பேருந்து நடத்துனர் பெருமாள் மரணத்திற்கு மது ஒரு காரணமாக இருந்தாலும், காவல்துறையினர் மீது இருந்த ஓர் அச்சம் தற்போது இல்லை.

இதற்கு காரணம் காவல்துறையினரே பல்வேறு தாக்குதல்களுக்கு உட்படுவதும், அதற்குப்பின் அரசியல் தலையீடு இருப்பதும் தான். வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தப்படுவதாகவும்,

சென்னை போதைப்பொருளின் விற்பனை சந்தையாக மாறிவிட்டதாகவும், காவல்துறையினரே அவர்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்ததாக பத்திகைகளில் செய்தி வரும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது.

சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கின்ற இந்த வேளையில், முதலமைச்சர் உட்கட்டமைப்பில் உலகத்தரம், கல்வி, அறிவாற்றலில் பேராளுமைத் திறம், அன்றாட தேவைகளில் மக்களுக்கு மன நிறைவு, தொய்வு இல்லாத தொழில் வளர்ச்சி, அனைத்து சமூகத்தவர்களுக்கான மேம்பாடு, நிதி, சட்டம் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை ஆகிய ஆறு இலக்குகளை வைத்து செயல்படுவதாக தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் பேசி இருக்கிறார். ஆனால், இந்த இலக்குகளை அடைவதற்கு அடித்தளமாக விளங்குவது சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்பதை முதலமைச்சர் மறந்து விட்டார்.

மேற்காணும் இலக்குகள் எய்த வேண்டுமென்றால், சட்டம்-ஒழுங்கு நன்கு பராமரிக்கப்பட வேண்டும். சட்டம்-ஒழுங்கு நன்றாக பராமரிக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் தலையீடு தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். இது தவிர, மதுக்கூடங்களை அமைக்க ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை என்றைக்கு நடைபெறுகிறதோ அன்றைக்குத்தான் சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த நடத்துனர் பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டாலும், பணியில் ஈடுபட்டு இருக்கும் போது தாக்கி கொலை செய்யப்பட்டது மற்றும் அவரது குடும்பத்தின் ஏழ்மை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், தமிழ்நாட்டில் தாண்டவமாடும் ரவுடிகளின் ராஜ்யத்தை, சமூக விரோதிகளின் சாம்ராஜ்யத்தை, வன்முறையாளர்களின் வெறியாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.