தற்போதைய செய்திகள்

அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கடும் வாக்குவாதம்-வலங்கைமான் அருகே திடீர் பரபரப்பு

திருவாரூர்

வலங்கைமான் அருகே அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளாததை கண்டித்து பொதுமக்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே கொட்டையூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சிக்காக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வந்தார்.

அப்போது கொட்டையூர் பகுதி கிராம மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டு கொட்டையூர் பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி வாக்குவாதம் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

கொட்டையூர் பகுதியிலுள்ள மேட்டு தெரு, வடக்கு தெரு மற்றும் மயானத்திற்கு செல்லக்கூடிய சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது எனவும், அந்த சாலையை சரி செய்து கொடுக்கக் கோரியும், மேலும், தார் சாலை அமைத்து தர வேண்டியும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அமைச்சரிடம் கூறினர்.

மேலும் அப்பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்ற அமைச்சரிடம் வலியுறுத்தினர்.

பொதுமக்கள் முற்றுகையிட்ட குறைகளை சுட்டிக்காட்டியதால் சற்றுநேரம் திணறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு வழியாக அவர்களை சமாளித்து அனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.