தற்போதைய செய்திகள்

எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றிபெறும் – முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேச்சு

ஈரோடு

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று ஈரோடு புறநகர் மாவட்ட கழக செயலாரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. பேசினார்.

கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை சீனா புரம் லஷ்மி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கழக அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள் ஜோதி கே.செல்வராஜ் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆசி பெற்ற கழகத்தின் ஆணிவேர்கள் கழக தொண்டர்களே. கழகம் இன்று புத்துணர்வோடு எழுச்சியாக உள்ளது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தை எடப்பாடி கே.பழனிசாமி சிறப்பாக வழி நடத்தினார்.

அம்மா காப்பீட்டு திட்டம், அம்மா சிமெண்ட், உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டம், அம்மா உணவக திட்டம், மிக்ஸி, கிரைண்டர் மின்விசிறி, தாலிக்கு தங்கம் என எண்ணற்ற திட்டங்கள் அம்மா ஆட்சியில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

எடப்பாடி கே.பழனிசாமி அவிநாசி-அத்திக்கடவு திட்டம், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் என மக்கள் குடிநீர் தாகம் திட்டங்களை கொண்டு வந்தார். பவானி தொகுதியில் பல்வேறு தடுப்பணைகள், குடிநீர் திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

திமுக ஆட்சியில் ஓராண்டு ஆகியும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மின்வெட்டால் மக்கள் மிகுந்த துயரமடைந்துள்ளனர். பொதுமக்கள் சொத்து வரி விதிப்பால் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். தி.மு.க அரசின் வேதனைகளை கழகத்தினர் வீடு வீடாக எடுத்து செல்ல வேண்டும்.

கழகத்தில் தொழில்நுட்ப பிரிவில் இளைஞர்கள் துடிப்பாக பணியாற்றி வருகின்றனர். கழகத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்க்க வேண்டும். கழக அமைப்பு தேர்தல் மூலம் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். திமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் கழகம் மாபெரும் வெற்றியடைவது உறுதி. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியடைய கழகத்தினர் பாடுபட வேண்டும். கொங்கு மண்டலம் கழகத்தின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசினார்