தற்போதைய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் – எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்

சென்னை

ஆட்சிப்பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் நிர்வாக ரீதியில் தமிழகத்தை 17-வது இடம் என்ற மோசமான தர வரிசைக்கு வந்து விட்டது தி.மு.க. வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி திட்டவட்டமாக கூறி உள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் வெளியிடப்பட்ட “SKOCH State of Governance 2021 report card”-ல் தமிழகம் 17-வது இடத்தை பெற்றிருப்பதன் மூலம், மிகவும் மோசமான ஆட்சி நிர்வாகத்தின் வாயிலாக தி.மு.க அரசு, தமிழகத்தை மிகவும் மோசமான நிலைக்கு, பின்னோக்கி கொண்டு செல்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிபெற்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் மற்றும் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கழக ஆட்சியில், 2019-ம் ஆண்டில் 5-வது இடமும்,2020-ம் ஆண்டில் 4-வது இடமும் பிடித்து நிர்வாகத்தில் சிறந்த மாநிலத்திற்கான “Star States” என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றிருந்தது.

நிர்வாக ரீதியில் அகில இந்திய அளவிலான தரவரிசையில், அதிமுக ஆட்சியில் 4-வது இடம் என்ற சிறப்பான இடத்தில் இருந்த தமிழகம், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே வருடத்தில் 17-வது இடம் என்ற மோசமான தர வரிசையை பெற்றுள்ளது.

தமிழகம் இந்த அளவிற்கு மிக மோசமான நிலையை பெற்றிருப்பது, திமுக அரசு அதன் நிர்வாகத்தில் தோல்வி அடைந்திருப்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த தி.மு.க, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல், வீண் செலவாக வெறும் விளம்பரங்களை மட்டுமே செய்து வருகிறது.

தி.மு.க அரசால் எந்தவித பயனும் இல்லை என்பதையும், இந்த அரசால் தாங்கள் மேலும் துன்பப்பட வேண்டி

இருக்கும் என்பதையும் மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.வுக்கு தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடாவும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார்.