தற்போதைய செய்திகள்

கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்கவேண்டும் – பொள்ளாச்சி வி. ஜெயராமன் எம்எல்ஏ பேட்டி

கோவை

தமிழகத்தில் கொப்பரை கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி மீண்டும் கொள்முதலை தொடங்க வேண்டும். ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கழகத் தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில்

200க்கும் மேற்பட்ட கழகத்தினர், மற்றும் தென்னை விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ பேட்டி அளித்தார்.

கடந்த 7,8 மாதங்களாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தேங்காய் விவசாயம்தான் அதிகளவு நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்தாண்டு கொப்பரை கிலோவிற்கு 105.90 ரூபாய் ஆதார விலையாக மத்திய அரசு நிர்ணயித்து.அதற்கான நிதியையும் வழங்கியுள்ள நிலையில் இன்று வரை கொள்முதல் செய்யாமல் தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது.

தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதால் அதன் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிந்தேன்.

திண்டுக்கல் வரை காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் நகராட்சி அருகே பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி உள்ள நிலையில் 123 கிமீ தொலைவில் உள்ள ஆழியார் அணையில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதால் ஏன் என்று தெரியவில்லை. இதனால் பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்.

மேலும் ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், குறிச்சி- குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.தற்போது ஆழியார் அணையில் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய நிலங்கள் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிருந்து தண்ணீரை கொண்டு சென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே தமிழக அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும். ஒட்டன்சத்திரம் நகராட்சி அருகே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.