பெரம்பலூர்

புதுவேட்டகுடி கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவி – ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே புதுவேட்டகுடி கூட்டுறவு சங்கம் மூலம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவியை ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா புதுவேட்டகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுவேட்டகுடி கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணசாமி அனைவரையும் வரவேற்றார். சரக துணைப்பதிவாளர் த.பாண்டித்துரை முன்னிலை வகித்தார்.

இதில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறு வணிகக்கடன், தனிநபர் கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன் என மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த சங்கம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு கோடியே ஏழு லட்சம் ரூபாய் இழப்பீட்டில் இருந்தது. தற்போது சங்க நிர்வாகக்குழு மற்றும் பணியாளர்களின் அயராத உழைப்பால் சங்கம் லாபத்தில் செயல்படுகிறது. இப்பகுதியில் உள்ள சங்க உறுப்பினர்கள் கடன்பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தி பின்னர் கடனை திருப்பி செலுத்தியதே இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு காரணம்.

தேசிய வங்கியில் கடன் பெற வேண்டுமானால் சொத்தை அடமானம் வைத்து கடன் பெற வேண்டும். அப்படி விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் வங்கி செயலாளர் நல்லதம்பி, உதவி செயலாளர் அன்பழகன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, பாசறை செயலாளர் இளஞ்செழியன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில்ராஜன் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.