சிறப்பு செய்திகள்

தி.மு.க.வின் பேச்சு கேலிக்கூத்து – எதிர்க்கட்சி தலைவர் காட்டம்

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,

முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பேரறிவாளன் விடுதலை முழுக்க முழுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு பேரறிவாளன் தனது தாயார் அற்புதம்மாளுடன் நேரில் சந்தித்து தனது விடுதலைக்காக பாடுபட்டதற்காக நன்றி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளன் விடுதலை பெற்றிருக்கிறார். புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற பொழுதே 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முயற்சி எடுத்தார். அவரது வழியில் தீர்வு காண்பதற்காக எனது தலைமையிலான அம்மாவின் அரசில் அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு அதில் பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காலதாமதம் செய்த காரணத்தினால் நீதிமன்றத்தின் மூலமாக பேரறிவாளன் தீர்ப்பை பெற்றிருக்கிறார். இதனை நான் வரவேற்கிறேன்.

இதே வேளையில் தி.மு.க. தங்களுக்கு கிடைத்த வெற்றியாக சொல்வது கேலிகூத்தாக இருக்கிறது. கருணாநிதி முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் அவருடைய தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அந்த அமைச்சரவை கூட்டத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நளினிக்கு குழந்தை இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு தண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாகவும், மற்றவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.

கழகம் தான் அம்மா காலத்திலும் சரி, அம்மா மறைவுக்கு பிறகும் சரி பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படும் என்ற அக்கறையோடு செயல்பட்ட காரணத்தினால் இன்றைக்கு உச்சநீதிமன்றத்தின் மூலமாக ஒரு நல்ல தீர்ப்பை பெற்றிருக்கிறார். பேரறிவாளன் நல்ல உடல் நலத்தோடு வாழவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

இதன் பின்னர் பேரறிவாளன் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது விடுதலைக்காக பாடுபட்டதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.