தற்போதைய செய்திகள்

மக்கள் நலத்திட்டங்களை முடக்கியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளாசல்

மதுரை

மக்கள் நலத் திட்டங்களை முடக்கிய தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உரப்பனூர் இந்திரா காலனி, பொன்னமங்கலம், மேலேந்தல் காண்டை நடுவக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாடக மேடை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நியாயவிலை கடை அங்கன்வாடி மையம், ஆற்றுப் பாலம், பயணிகள் நிழற்குடை ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு மாதாமாதம் 1,000 ரூபாய் தருவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை வழங்கவில்லை. இது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், எதிர்க்கட்சி துணைத் தலைவரும் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதற்கு உரிய பதில் அளிக்கவில்லை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு ஆகிறது. முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டிய திட்டங்களை திறந்து வைக்கிறார்களே தவிர புதிய திட்டங்கள் எதையும் அவர்கள் தொடங்கவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்கிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து மாணவர்களை ஏமாற்றியவர்கள், ரூ.2500 பொங்கல் பரிசை பறித்துவிட்டு ஆட்சியில் இருக்கும் நீங்கள் திராவிட மாடல் ஆட்சி என்று சொல்வது நியாயமா? இன்றைக்கு ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும் அரசு தான் திராவிட மாடல் அரசா? என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஓராண்டில் மதுரை மாவட்டத்தில் கலைஞர் நூலகத்தை தவிர வேறு திட்டத்தையும் கொண்டு வந்தது இல்லை. குறிப்பாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட தாலிக்கு தங்கம் திட்டம்,

அம்மா மினி கிளினிக், உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், மடிகணினி திட்டம் இப்படி திட்டங்களை முடக்கியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள் பயன்பெற்று வந்த திட்டங்களை ஓராண்டில் முடக்கியது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை?

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசினார்.