தமிழகம்

வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் நேற்று முன்தினம் இரவு தாயார் அற்புதம்மாளுடன் நேரில் சந்தித்து தனது விடுதலைக்காக பாடுபட்டதற்காக நன்றி தெரிவித்தார்.

இதன் பின்னர் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பேரறிவாளனை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். ஒரு மாநில முதலமைச்சருக்கு இருக்கும் உரிமை என்ன என்பதை பேரறிவாளன் விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிரூபித்து தீர்மானம் நிறைவேற்றியவர் அம்மா தான்.

பேரறிவாளனை விடுவிக்க கழக அரசு எடுத்த சட்ட நடவடிக்கைகளின் வரலாற்றை தி.மு.க. அரசால் ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதற்கு முழு காரணம் மறைந்த முதலமைச்சர் அம்மா தான்.

அம்மாவின் தியாகத்தையும், உணர்வையும் அனைவரும் அறிவர். வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. ஆரம்ப காலங்களில் இருந்து பல்வேறு கட்டங்களில் யார் யார் என்னென்ன தீர்மானம் எடுத்தார்கள் என்பதெல்லாம் ஒரு வரலாற்று உண்மை. இதனை திரித்து கூறுவது தவறானது.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.