மதுரை

வைகையை புனரமைத்து வற்றாத நதியாக மாற்ற முடியும் – ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் தகவல்

மதுரை

ஆறுகளை புனரமைத்து வற்றாத நதியாக மாற்ற முடியும் என்று ஆறுகள் மறு சீரமைப்பு நிர்வாக தலைவர் டாக்டர் கே.சத்யகோபால் தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைகை நதி மீட்பு, பாதுகாப்பு மற்றும் புனரமைத்தல் தொடர்பான மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.சத்தியகோபால் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் சத்யகோபால் பேசியதாவது:-

மத்திய மற்றும் மாநில திட்டங்கள் மூலம் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றினை புனரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் வழங்கியுள்ள ஆலோசனைப்படி வைகை ஆறு தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. வைகை ஆறு எல்லை மறுவரையறை, திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, சீமை கருவேலம் மற்றும் புதர்களை அகற்றும் பணி, நீர் சேகரிப்பு அமைப்புகள் உள்ளிட்ட பணிகள் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவர்களால் புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்ட விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் வைகை ஆற்றினை புனரமைப்பதன் மூலம் விவசாயம் வளம் பெறுவது மட்டுமல்லாது, நிலத்தடி நீர் மட்டத்தினையும் உயர்த்த முடியும். நதியின் பயன்பாட்டின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் பங்களிப்பை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். வைகையை புனரமைக்கும் முன் மூன்று விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அவை ஆக்கிரமிப்பு, மாசு, நிலத்தடி நீர் மட்டம் குறைவு ஆகும். இம்மூன்று குறைகளையும் களைவதன் மூலம் வைகை நதியினை புனரமைத்து வற்றாத நதியாக மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தாலுகா வாரியாக நீர்நிலைகள் எண்ணிக்கை குறித்தும் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் எண்ணிக்கைக் குறித்தும் மேலும் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகள் குறித்தும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும், நீர்நிலைகளின் எல்லைகள் அளவிடுவது மற்றும் எல்லைக் கற்கள் நிறுவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.