தற்போதைய செய்திகள்

வேட்டவலம் அம்மா பிறந்தநாள் விழாவில் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வேட்டவலம் நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேட்டவலம் கடைவீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் நகர செயலாளர் கே.செல்வமணி தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ஆசாரம் (எ) திருமூர்த்தி, நகர பொருளாளர் அப்துல்காதர், நகர அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏழை எளியோர்களுக்கு 1572 தென்னை மரக்கன்றுகள், 500 வேட்டி, சேலை, அரிசி, மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் ஆகியவற்றை வழங்கினர்.

மேலும் 1000 பேருக்கு அறுசுவையுடன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருபது மணி நேரத்திற்கு மேலாக உழைத்து தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கினார். அதனைத்தொடர்ந்து அம்மா வழியில் கட்சியையும், ஆட்சியையும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். அம்மா வழியில் பல எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகள் குளங்கள் தூர்வாரப்பட்டதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் குடிநீர் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கீழ்பென்னத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அரங்கநாதன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கரன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் பாஷ்யம், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் தொப்பளான், நகர துணை செயலாளர்கள் பவுன்குமார், இந்திரா சிதம்பரம், வெண்ணிலா முருகன், மாவட்ட பிரதிநிதிகள் விஜயா சோழன், மெடிக்கல் ரமேஷ், சக்திவேல், பழக்கடை ரஜினி சிவக்குமார், கராத்தே ராஜா, இளைஞர் பாசறை நிர்வாகிகள் அறிவழகன், அன்புக்கரசன், விஜயகுமார், மூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.