தற்போதைய செய்திகள்

இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் – கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பங்கேற்பு

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டங்களில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பங்கேற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சமங்கலம், வரட்டணப்பள்ளி, ஒரப்பம் பகுதிகளில் கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஆலோசனை கூட்டம் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.

பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்பியுமான கேபி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி, கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் வெற்றிபெற வியூகங்களை வகுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றி கழகம் மீண்டும் ஆட்சியமைக்க ஒவ்வொரு தொண்டர்களும் அயராது பாடுபட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.