தமிழக மக்களின் சுமையை விடியா அரசு குறைக்குமா?எதிர்க்கட்சி தலைவர் கேள்வி

சென்னை
மத்திய அரசை பின்பற்றி பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்து தமிழக மக்களின் சுமையை விடியா அரசு குறைக்குமா? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க, மத்திய கலால் வரியினை இதுவரை இரண்டு முறை குறைத்துள்ளது. முதல் முறையாக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 10 ரூபாயும் குறைத்தது.
மேலும், மத்திய அரசு அவ்வாறு கலால் வரியினை குறைக்கும் போது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், அந்தந்த மாநில அரசுகளின் மாநில வரியினை குறைக்க கேட்டுக்கொண்டதை அடுத்து இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைத்தன.
ஆனால், தமிழக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியினை குறைக்காமல், தனது கூட்டணிக்கட்சிகளுடன் இணைந்து, மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையினை குறைக்கக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.
தொடர்ந்து, மத்திய அரசு இரண்டாம் முறையாக நேற்றுமுன்தினம் (21.5.2022) மத்திய கலால் வரியினை, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 8 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்துள்ளது. மேலும், உஜ்வாலா சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால், இந்தியாவில் மற்ற பொருட்களின் விலைகள் குறையும் என்று பாரத பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, நேற்று தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.8.22 குறைந்து ரூ.102.63-க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.6.70 குறைந்து ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் இரண்டாம் முறை விலை குறைப்பை அடுத்து, அண்டை மாநிலமான கேரளாவும் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மாநில வரியை குறைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆக, மத்திய அரசு முதல் முறை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.5-ம், இரண்டாம் முறை ரூ.8-ம் என்று மொத்தம் ரூ.13-ஐ குறைத்துள்ளது. அது போல, டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.10-ம், இரண்டாம் முறை ரூ.6-ம் என்று மொத்தம் ரூ.16-ஐ குறைத்துள்ளது.
தேர்தல் சமயத்தில் தி.மு.க. நிறைவேற்ற முடியாத, பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள இந்த விடியா தி.மு.க. அரசு, தனது 504-வது வாக்குறுதியில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால், பெட்ரோலுக்கு ரூ.3-ஐ மட்டும் குறைத்துள்ள இந்த விடியா அரசு, டீசல் விலையை இதுவரை குறைக்கவில்லை. தேர்தல் சமயத் ல் அளித்த வாக்குறுதியை இந்த அரசு இதுவரை முழுமையாக நிறைவேற்றாதது, தமிழக மக்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், தி.மு.க. கட்சியின் பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான, டி.ஆர்.பாலு பேட்டியளித்த போது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம், திருத்தமாக கூறியுள்ளார்.
அவ்வாறு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதன் மூலம், குறைந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை குறையும் என்றும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருட்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.
பொதுமக்களின் தினசரி வாழ்வில் பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வியாபாரிகள் தங்கள் பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படும் வாகன போக்குவரத்திற்கும், விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டருக்கும், பம்ப் செட் மோட்டார்களுக்கும், மீனவர்களின் படகுகளுக்கும், அலுவலகம் செல்வோர் மற்றும் சாதாரண மக்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனம் முதல் அனைத்து வாகனங்களுக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் தேவை இன்றியமையாததாகும்.
இதனால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயரும்போது மற்ற அனைத்து பொருட்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையும்போது அனைத்து பொருட்களின் விலையும் குறையும். இதனால் சிறு வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயனடைவர்.
இப்போதாவது, மக்களுடைய பிரச்சினையை உணர்ந்து மற்ற மாநிலங்களை போல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து, தமிழகத்தில் வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரின் நலனையும் காக்க வேண்டும் என்றும், தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்த தி.மு.க. அரசை வற்புறுத்துகிறேன்.
எனவே, தமிழகத்தில் விலைவாசியை குறைக்கும் நோக்கில், மததிய அரசு குறைத்தது போல், மாநில வரியில் குறைந்த பட்சம் பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 9 ரூபாயும் உடனடியாக குறைக்க வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.