32 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்து 32 ஆயிரம் பேருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டியை அடுத்த பாலப்பாடியில் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் செஞ்சி கே.கதிரவனின் மஞ்சுளா ஏஜென்சிஸ் எச்.பி. பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செஞ்சியில் பழங்குடியினர் கூலி தொழிலாளிகள் மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் உள்பட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக விழாவுக்கு வந்தவர்களை பெட்ரோல் பங்க் உரிமையாளரும், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளருமான செஞ்சி கதிரவன், மஞ்சுளா ஆகியோர் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆலம்பூண்டி, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அரிசி , புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அனைத்து சமுதாய மக்கள் உள்பட மொத்தம் 32 ஆயிரம் பேருக்கு திருமண சீர்வரிசை, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். பாலப்பட்டில் 5 பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டி தங்க மோதிரம் பரிசளித்தார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சக்ரபாணி, அர்ஜூனன், கழக அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட கழக நிர்வாகிகள் கண்ணன், முரளி ரகுராமன், வெங்கடேசன், ரங்கநாதன், நகர செயலாளர்கள் தீனதயாளன், பசுபதி, ராமதாஸ், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, புண்ணியமூர்த்தி, விநாயகமூர்த்தி, அருண்தத்தன், சோழன் உள்பட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பெட்ரோல் பங்க் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெட்ரோல் பங்க் உரிமையாளரும், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளருமான செஞ்சி கதிரவன் வெள்ளி வீர வாளை நினைவு பரிசாக வழங்கினார்.