தற்போதைய செய்திகள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி உறுதி

கோவை

தி.மு.க.வுக்கு 85 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் கோவை மண்டலத்திற்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் கடலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப பிரிவின் கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்திற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர்கள் கோவை சத்யன், ஜனனி பி.சதீஷ்குமார், வினோ பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகவல் தொழில்நுட்ப பிரிவின் கோவை மாவட்ட செயலாளர்கள் ஆர்.சசிகுமார், கே.கே.சக்திவேல், மணிகண்டன் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

தி.மு.க.வின் தொடர் பொய் பிரசாரங்களால் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்றாம் முறையாக கழகம் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நூலிழையில் இழந்தது. அதேபோல் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. பணபலம், அதிகார துஷ்பிரயோகம், வாக்கு இயந்திரங்களில் முறைகேடு என அனைத்து வழிகளையும் கையாண்டு மாய வெற்றியை பெற்றுள்ளது.

தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு மக்களுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தராமல் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு பெயர் சூட்டு விழா நடத்தி விளம்பரங்கள் மூலம் ஆட்சி செய்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியின் மீது மக்கள் கோபத்திலும், வெறுப்பிலும் உள்ளனர்.

இச்சூழ்நிலையில் கழகத்தின் எதிர் பிரச்சாரங்களை நாளிதழ்களில், ஊடகங்களில் விலை கொடுத்து தி.மு.க. இருட்டடிப்பு செய்கிறது. இந்த வியூகத்தை முறியடிக்க கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு முக்கிய பங்காற்ற வேண்டும்.

தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின்வெட்டு, மதுவிலக்கு மற்றும் கழகத்தின் திட்டங்களுக்கு தி.மு.க. தனது திட்டங்களாக ஸ்டிக்கர் ஒட்டுவது இவற்றுக்கெல்லாம் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் பதிலடி கொடுக்க வேண்டும்.

மேலும் தாலிக்கு தங்கம், அம்மா இரு சக்கர வாகனம், மடிகணினி திட்டம் ஆகிய கழக அரசின் சாதனை திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கியது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களை சென்றடையும் வகையில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளை சமூக வலைத்தளங்கள் மூலம் எளிய முறையில் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுங்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் கழகத்தின் மூலம் செய்து தரப்படும்.

இளைஞர்களே உங்களுக்கு கழகம் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கி தரும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கழகம் சிறப்பான வெற்றியை பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் முறியடிக்க வேண்டும். தி.மு.க .ஆட்சியில் வன்முறை, பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை அதிகரித்து உள்ளது. யாருக்கும் பயப்படாமல் ஊடகங்கள் செய்திகளை வெளியிட வேண்டும்.

எந்த திட்டங்களையும் நிறைவேற்றாத தி.மு.க.வின் மக்கள் விரோத போக்கை தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மக்களிடையே கொண்டு செல்லும்போது வழக்குகளை போடுகிறார்கள்.

இதற்கெல்லாம் பயப்படாதீர்கள். உங்களுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம். கழகத்தின் இதயமாகிய தகவல் தொழில்நுட்ப பிரிவினரின் சிறப்பான பணிக்கு எனது வாழ்த்துக்கள்.

எந்த திட்டமும் நிறைவேற்றாமல் விளம்பரத்தால் மட்டும் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது தி.மு.க.. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டிலேயே 85 சதவீத மக்கள் தி.மு.க.விற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்கள் நம் பக்கம் உள்ளனர். மிரட்டலுக்கு பயப்படாதீர்கள். தி.மு.க. என்றுமே நமக்கு எதிரி தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.