தற்போதைய செய்திகள்

முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கையால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்வு – அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்

சென்னை

முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கையால் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகர் மண்டல பகுதிகளில் நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து கோடம்பாக்கம் காமராஜ் காலனியில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொது மக்களுக்கு முககவசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

அம்மாவின் நல்லாசியுடன், இந்திய திருநாட்டில் ஒரு முன்னுதாரணமாக தன்னுடைய செம்மையான, உறுதியான நடவடிக்கையின் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டதனால் இன்றைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி செல்கின்ற நிலை உருவாகி இருக்கிறது.

இதுவரை சென்னை மாநகராட்சியில் 12712 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 820358 நபர்கள் பயனடைந்து உள்ளனர். அதில் 38280 அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான், பாதிக்கப்பட்டவர்களின் 62 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருக்கிறார்கள். முதலமைச்சரின் ஆணைப்படி எங்களை போன்ற அமைச்சர்களை சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து 15 மாநகராட்சி மண்டலங்களில் மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் கொரோனா தடுப்பு பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

மாநகராட்சியில் தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தெருக்கள் 2414 ஆகும். இதில் தற்போது 990 தெருக்கள் பாதிப்பே இல்லாமல் இருக்கிறது. ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை. இவையெல்லாம் முதலமைச்சர் எடுத்த உறுதியான நடவடிக்கையால் மருத்துவ ரீதியான வெற்றி.

இந்த மாதம் 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதன் படி வழங்கப்படுகிறது. பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை 10ம்தேதி முதல் வாங்கி கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை உணவு பற்றக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

பின்னர் மண்டலம் 10 அலுவலகத்தில் மண்டலம் 10 தொடர்புடைய அனைத்து அலுவலர்களுடன் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆய்வு மேற்கொண்டார். மண்டலம் 9 நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாம் அருகில் உள்ள நடமாடும் சுவாசப் பரிசோதனை மையத்தில் நடைபெறும் பரிசோதனை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை ஆய்வு செய்து பொது மக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் மற்றும் கையேடு ஆகியவற்றை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளின் போது தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.சத்யா, மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் டாக்டர். எஸ்.வினீத், கோபால சுந்தரராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.முத்துசுவாமி, கே.மீனா, சி.கலைசெல்வன், எஸ்.சாந்தி, மண்டல அலுவலர்கள் ஜெய்பீம், கே.சுந்தர்ராஜன் மற்றும் தொடர்புடைய மண்டல அலுவலர்களும் உடனிருந்தனர்.